பிரிட்டன் பிரதமர் லிஸ் டிரஸின் வாழ்க்கை வரலாறு

பிரிட்டன் பிரதமர்  லிஸ் டிரஸின் வாழ்க்கை வரலாறு

பிரிட்டன் பிரதமர் தேர்தலில் லிஸ் டிரஸ் வெற்றிவாகை சூடியுள்ளார். 47 வயதாகும் அவர், கடந்த 1975-ம் ஆண்டு, இங்கிலாந்தின் வடக்குப் பகுதியிலுள்ள ஆக்ஸ்ஃபோர்டு நகரில் பிறந்தவர். ஆக்ஸ்ஃபோர் பல்கலைக்கழகத்தின் கீழ செயல்படும் மெர்ட்டன் கல்லூரியில், அரசியல் மற்றும் பொருளாதாரப் பிரிவில் பட்டம் பெற்றார். படிக்கும்போதே லிபரல் டெமாக்ரட் கட்சியின் இளைஞரணியில் சேர்ந்தார்.

கடந்த 1996-ம் ஆண்டு அந்தக் கட்சியிலிருந்து விலகி, கன்சர்வேட்டிவ் கட்சியில் இணைந்தார். 1996 முதல் 2000-ம் ஆண்டு வரை உலகப் புகழ்பெற்ற எண்ணெய், எரிவாயு நிறுவனமான ஷெல்' நிறுவனத்தின் பொருளாதாரப் பிரிவில் பணியாற்றினார். அதன் பிறகு சில தனியார் நிறுவனங்களில் பணியாற்றிய லிஸ் டிரஸ், நேரடி அரசியலிலும் களமிறங்கினார்.

எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி'யின் கோட்டையான மேற்கு யார்க்‌ஷையர் பகுதியில்தான் லிஸ் டிரஸ் வாழ்ந்து வந்தார். 2001 நாடாளுமன்றத் தேர்தலில் முதன்முறையாகப் போட்டியிட்டார். அந்தப் பகுதியிலுள்ள ஹெம்ஸ்வொர்த் தொகுதியில் களம் கண்ட லிஸ் டிரஸ், தொழிலாளர் கட்சியின் வேட்பாளரிடம் தோல்வியுற்றார்.

ஆனாலும் அந்தத் தொகுதியில் கன்சர்வேட்டிவ் கட்சியின் வாக்கு வங்கி முன்பைவிட 4 சதவிகிதம் அதிகரித்திருந்தது. 2005ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில், மேற்கு யார்க்‌ஷையரின் மற்றொரு தொகுதியான கால்டர் வேலி தொகுதியில் போட்டியிட்டு வென்றார் லிஸ் டிரஸ். அப்போதிலிருந்து தீவிர அரசியலில் ஈடுபட்டுவருகிறார். பிரிட்டனின் முதல் பெண் பிரதமரான மார்கெரட் தாட்சர்தான் லிஸ் ட்ரஸ்ஸின் ரோல் மாடல் என்று அடிக்கடி அவர் கூறுவது உண்டு.

2012-ம் ஆண்டு முதல் உணவு, குழந்தைகள் நலம், சுற்றுச்சூழல், கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்குச் செயலாளராக பதவி வகித்திருக்கிறார் லிஸ் டிரஸ். 2019-ம் ஆண்டு, போரிஸ் ஜான்சன் அமைச்சரவையில், பெண்கள், சமத்துவத்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றார்.

பின்னர் 2021 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில், பிரிட்டனின் வெளியுறவுத்துறை அமைச்சரானார். ரஷ்யா - உக்ரைன் போரில், உக்ரைன் பக்கம் நின்று, ரஷ்ய அதிபர் புதினுக்கு கடும் கண்டனங்களைப் பதிவு செய்தார். மேலும், ரஷ்யாமீது பொருளாதாரத் தடை விதித்ததில், இவருக்கு மிக முக்கியப் பங்குண்டு. ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் விலகியதிலும் முக்கிய பங்காற்றினார் லிஸ் ட்ரஸ். இவர், போரிஸ் ஜான்சனின் தீவிர விசுவாசி என்றும் சொல்லப்படுகிறது.

இந்தத் தேர்தலில் வெற்றி பெற்றதன் மூலம் பிரிட்டனின் மூன்றாவது பெண் பிரதமர் என்ற பெருமையை லிஸ் டிரஸ் தட்டிச் சென்றுள்ளார்.