வேளாண் கல்லூரி மாணவ, மாணவிகள் கொளுத்தும் வெயிலில் சாலை மறியல் போராட்டம்
கரூரில் மூன்று ஆண்டுகளாக திருமண மண்டபத்தில் இயங்கும் அரசு வேளாண் கல்லூரி – வேளாண் கல்லூரி மாணவ, மாணவிகள் 60-க்கும் மேலானோர் கொளுத்தும் வெயிலில் சாலை மறியல் போராட்டம்.
கரூர் மாநகராட்சிக்கு சொந்தமான திருமண மண்டபம் உழவர் சந்தை அருகில் அமைந்துள்ளது இந்த கட்டிடத்தில் கடந்த மூன்று ஆண்டுகளாக அரசு வேளாண்மை கல்லூரி செயல்பட்டு வருகிறது. இதில் முதலாமாண்டு மாணவர்கள் 66 பேர், இரண்டாம் ஆண்டு மாணவர்கள் 68 பேரும் என நூற்றுக்கும் மேற்பட்டோர் இங்கு பயின்று வருகின்றனர். கல்லூரி தொடங்கிய வருடத்தில் பயின்ற தற்போதைய மூன்றாம் ஆண்டு மாணவ, மாணவிகள் கோவை வேளாண் கல்லூரியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் கல்லூரிக்கு என உரிய இடம் ஒதுக்கி கட்டிடம் கட்ட வேண்டும் என்றும், போதிய வசதிகள் இல்லாமல், பயிற்சிக்காக வெளியே அழைத்து செல்லாமல், ஆறு மாத பருவத் தேர்வுக்கு கடைசி ஒரு வாரம் மட்டும் முழு பாடத்தையும் படிக்க சொல்லி தொந்தரவு செய்கின்றனர் என, கல்லூரி நிர்வாகத்தை கண்டித்து கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட உழவர் சந்தை அருகில்
கரூர் – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பெற்றோருடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டத்தின் காரணமாக ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் அரசு பேருந்துகள் மற்றும் வாகனங்கள் திருப்பி விடப்பட்டது. போராட்டத்தின் இடையே கரூர் மாநகராட்சி மண்டல தலைவர்கள் கனகராஜ் மற்றும் ராஜா ஆகிய இருவரும் பெற்றோர்கள் மற்றும் மாணவ, மாணவிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி கல்லூரி வாயில் முன்பு தொடர் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர்.
ஆனால், போராட்டத்திற்கு முழுமையாக செவிசாய்க்காமல் கல்லூரி நிர்வாகத்தை சேர்ந்த முதல்வர் மற்றும் பேராசிரியர்கள் யாரும் இதுவரை பேச்சுவார்த்தைக்கு வரவில்லை. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.