சிவகங்கை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நீர்த்தேக்க தொட்டி அருகே கொட்டப்படும் குப்பையால், துர்நாற்றம், சுகாதாரக் கேடு மற்றும் நோய் தொற்றால் பொதுமக்கள் அவதி.
சிவகங்கை நகராட்சியில் சேமிக்கப்படும் குப்பைகள் மூன்று இடங்களில் கொட்டி தரம் பிரித்து, மக்கும் குப்பையினை உரமாகவும், மக்காத குப்பைகள் தனியாருக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
நகராட்சி பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகள் சிவகங்கை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மருது பாண்டியர் நகரில் தரம் பிரிப்பதற்காக கொட்டப்பட்டு மலைபோல் காட்சியளிக்கிறது. இங்கு குப்பை கழிவுகளில் இருந்து துர்நாற்றம் வீசுவதுடன், இதிலிருந்து வெளியேறும் புழு, பூச்சிகள் அருகில் உள்ள செந்தமிழ் நகர் பகுதியில் உள்ள வீடுகளில் தாக்குவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். மேலும் மழைக்காலங்களில் குப்பையில் இருந்து நிலத்தடியில் செல்லும் கழிவு நீரால் சுற்று வட்டார பகுதியில் நிலத்தடி நீர் மாசுபட்டு துர்நாற்றம் வீசுவதாகவும் அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இதனால் இப்பகுதி ஒட்டி வாழும் மக்கள் பல்வேறு நோய் தொற்று ஏற்பட்டு அவதி அடைந்து வருவதாக வேதனை தெரிவிக்கின்றனர். ஏற்கனவே சிவகங்கை நகராட்சியில் கொட்டப்பட்ட குப்பைகள் தரம் பிரிக்காமல் மலை போல் தேங்கி கிடக்கும் நிலையில், நாள்தோறும் சுமார் 50 டன் குப்பைகள் சேருவதால் கூடுதல் பணியாளர்களைக் கொண்டும், புறநகர் பகுதியில் குப்பை கிடங்கு அமைக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
மேலும் மாவட்ட தலைநகரான சிவகங்கை முன் மாதிரியாக திகழ வேண்டிய ஆட்சியர் அலுவலக வளாகம் நோய் பரப்பும் கூடமாக திகழ்வதால் விரைவில் போராட்டம் நடத்த உள்ளதாகவும், கூறுகின்றனர். பொதுமக்களின் அடிப்படை பிரச்சனைகளை தீர்க்க வேண்டிய அரசு, மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் நோய்த் தொற்று ஏற்படும் விதமாக செயல்படும் குப்பை கிடங்கை வேறு இடத்திற்கு மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை அனைவரது கோரிக்கையாக உள்ளது.