1952 ல் கட்டப்பட்ட ஒற்றையடி பாலத்தை உயர் மட்ட பாலமாக மாற்றுவதற்காக 4.06 கோடி ரூபாய் ஒதுக்கீடு.மாவட்ட ஆட்சியர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் அடிக்கல் நாட்டினர்.பொதுமக்களின் 25 ஆண்டு கால கோரிக்கை நிறைவேறியது
திருவாரூரில் இருந்து தஞ்சாவூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் ஓடம் போக்கி ஆற்றின் குறுக்கே திருவாரூரில் இருந்து மடப்புரம் பகுதிக்கு செல்லக்கூடிய வகையில் கடந்த 1952ல் ஒற்றையடி பாலம் ஒன்று அமைக்கப்பட்டது.இந்த மடப்புரம் பாலத்தை கடந்து சென்றால் எளிதாக தனியார் மருத்துவமனைகள் அரசு உதவி பெறும் பள்ளிகள் தனியார் பள்ளிகள் தியாகராஜ சுவாமி திருக்கோயில் போன்றவற்றிற்கு எளிதாக செல்ல முடியும்.இருப்பினும் இந்த பாலும் ஒற்றையடி பலமாக இருந்த காரணத்தினால் நகர் பகுதியில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.
மேலும் இங்கு கனரக வாகனங்கள் செல்லக்கூடிய அளவில் பால வசதி இல்லாத காரணத்தினால் திருவாரூர் பழைய பேருந்து நிலையத்தை சுற்றி சுமார் மூன்று கிலோ மீட்டர் தூரம் பயணித்து நகர் பகுதிக்கு வாகனங்கள் செல்ல வேண்டி இருப்பதால் இந்த பாலத்தை புதியதாக விரிவுபடுத்தி கட்டித்தர வேண்டும் என கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
இந்த நிலையில் தமிழகத்தில் மு.க ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி அமைந்ததும் முதல் சட்டமன்ற கூட்டத்தொடரில் திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் தனது கன்னி பேச்சில் இந்த பாலத்தை புதியதாக கட்டித் தர வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.அதன் அடிப்படையில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் மூலதன மானிய திட்டத்தின் கீழ் திருவாரூர் மடப்புரம் ஓடம்போக்கி ஆற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம் கட்டுவதற்காக 4.06 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது.
இந்த நிலையில் இந்த பாலத்திற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று அப்பகுதியில் நடைபெற்றது. இதில் திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சாரு ஸ்ரீ ஆகியோர் கலந்து கொண்டு உயர்மட்ட பாலத்திற்கான அடிக்கல்லை நாட்டினர்.மேலும் ஜேசிபி இயந்திரத்தின் மூலம் பாலம் அமைய உள்ள இடத்தில் பணிகள் தொடங்கப்பட்டது.அதனையும் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இந்த பாலம் கனரக வாகனங்கள் கலந்து செல்லக்கூடிய அளவிற்கு கட்டப்பட உள்ளதால் இப்பகுதி மக்களின் நீண்ட கால கோரிக்கை நிறைவேறுவதுடன் போக்குவரத்து நெரிசலும் குறையும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.