குடியரசுக் கட்சி அதிபர் வேட்பாளர் போட்டியில் இருந்து நிக்கி ஹேலி விலகினார்
குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளர் போட்டியில் இருந்து நிக்கி ஹேலே விலகி உள்ளார்.
வரும் நவம்பர் மாதம் அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. தற்போது ஜனநாயக கட்சியின் ஜோ பைடன் அமெரிக்க அதிபராக செயல்பட்டு வருகிறார். இவரது பதவிக்காலம் நவம்பர் வாக்கில் நிறைவடைய உள்ளது. இந்த சூழலில் அந்த நாட்டின் பிரதான கட்சியாக உள்ள குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளர் யார் என்பதை தேர்வு செய்வதற்கான தேர்தல் முன்னெடுக்கப்பட்டது.
மாகாண அளவில் இந்த தேர்தல் நடைபெற்று வருகிறது. இதில் டிரம்பின் கை தொடக்க முதல் ஓங்கியே இருந்தது. பெருவாரியான ஆதரவுடன் அவர் முன்னிலை வகித்து வருகிறார். இந்த சூழலில்தான் நிக்கி ஹேலே விலகி உள்ளார். ‘நான் போட்டியில் இருந்து விலக வேண்டிய நேரம் வந்துவிட்டது’ என அவர் சொல்லியுள்ளார்.
இருந்தும் தொடர்ச்சியாக எனது குரலை நான் பொது வெளியில் தெரிவிப்பேன் என அவர் சொல்லியுள்ளார். அதே நேரத்தில் அதிபர் வேட்பாளர் போட்டியில் இருக்கும் டிரம்புக்கு தனது வாழ்த்தினையும் தெரிவித்துள்ளார். டிரம்புக்கு களத்தில் சரியான போட்டியாளராக அவர் திகழ்ந்தார்.
வீழ்ச்சிக்கு பிறகு ஹேலே விலகிவிட்டார். அவரது ஆதரவாளர்கள் எனக்கு ஆதரவாக பணியாற்றலாம் என டிரம்ப் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு அதிபர் தேர்தலில் போட்டியிட உள்ளதாக ஹேலே அறிவித்தார். ஏற்கனவே விவேக் ராமசாமி உள்ளிட்டோர் அதிபர் வேட்பாளர் தேர்தலில் இருந்து விலகியது குறிப்பிடத்தக்கது.
52 வயதாகும் நிக்கி ஹேலே இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர். இவரின் தந்தை அஜித் சிங் பஞ்சாப்பை பூர்வீகமாக கொண்டவர். முதலில் கனடாவில் குடியேறிய அஜித் சிங் அதன்பின் குடும்பத்துடன் அமெரிக்காவுக்கு இடம்பெயர்ந்துள்ளார்.
அமெரிக்காவின் தெற்கு கரோலினா பகுதியில் வசித்து வந்துள்ளனர். இதே தெற்கு கரோலினா மாகாண ஆளுநராக தனது 39 வயதில் பதவியேற்று அமெரிக்காவின் இளம் ஆளுநர் என்ற சாதனையை கடந்த 2011-ல் படைத்தார் நிக்கி ஹேலே. இரு முறை இம்மாகாணத்தில் சிறப்பாக செயல்பட்ட நிக்கி, டிரம்ப் அதிபராக இருந்தபோது 2017 முதல் 2018 வரை ஐ.நா சபைக்கான அமெரிக்க பிரதிநிதியாகப் பணியாற்றியுள்ளார்.