இளைஞர்கள் தாழ்வு மனப்பான்மையின்றி போட்டி தேர்வை எதிர்கொள்ள வேண்டும்
இன்ஸ்பெக்டர் ராஜகுமார் அறிவுறுத்தல்
புதுச்சேரி, எல்லைப் பகுதியில் உள்ள செட்டிப்பட்டு கிராமம், போலீஸ் கிராமமாக வளர்ந்து வருகிறது. இங்கு, இன்ஸ்பெக்டர் முதல் ஊர்காவல் படை வீரர்கள் வரை 100க்கும் மேற்பட்டோர் போலீஸ் துறைகளில் பணியாற்றி வருகின்றனர். கடந்த ஆண்டு நடந்த போலீஸ் தேர்வில் 11 பேர் தேர்வாகினர்.
இந்நிலையில், தற்போது நடந்து முடிந்த போலீஸ் ஊர்காவல் படை வீரர்களுக்கான உடற்தகுதி தேர்வில், செட்டிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த ஆண்கள், பெண்கள் என 38 பேர் தகுதி பெற்று,எழுத்து தேர்வுக்கு தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இதற்கிடையே, எழுத்து தேர்வுக்கு தகுதி பெற்ற இளைஞர்கள், தேர்வில் எவ்வாறு தேர்ச்சி பெறுவது தொடர்பான விழிப்புணர்வு கலந்தாய்வு கூட்டம் நடந்தது. கூட்டத்தில் வந்தவர்களை, தலைமை காவலர் சுமன் வரவேற்றார்.
இதில், திருக்கனுார் இன்ஸ்பெக்டர் ராஜகுமார் கலந்து கொண்டு, தன்னம்பிக்கை உடன் தன்னால் முடியும் என்ற எண்ணத்துடன் எழுத்து தேர்வுக்கு தயாராக வேண்டும். அரசு பள்ளிகளில், தமிழ் மொழி பாடத்திட்டத்தில் படித்து உள்ளோம் என்ற தாழ்வு மனப்பான்மை எப்பொழுதும் இருக்கக் கூடாது என்றார்.
தாழ்வு மனப்பான்மை இன்றி செயல்பட்டால் மட்டுமே வாழ்க்கையில் முன்னேற முடியும். தற்போது போலீஸ் தேர்வில் எத்தனை பேர் கலந்து கொள்கின்றனர் என்பதை மனதில் வைத்துக் கொள்ளக் கூடாது. நான் எப்படி எழுத்து தேர்வில் வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணம் ஒன்றை மட்டுமே மனதில் வைத்துக் கொண்டு தன்னம்பிக்கையுடன் படிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
கூட்டத்தில், திருமணம் முடிந்து இரண்டு குழந்தைகளை பெற்ற நிலையில், தற்போதய ஊர்காவல்படை உடற்தகுதி தேர்வில் வெற்றி பெற்ற பெண் மற்றும் 41 வயதிலும் உடற்தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற இளைஞர் என இருவருக்கு இன்ஸ்பெக்டர் ராஜகுமார் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.