மேல்மலையனூரைச் சேர்ந்த என்ஜினியர் ராஜேஷ் மாலத்தீவில் தற்கொலை
திருமணம் நிச்சயக்கப்பட்ட பெண் வேறு ஒருவருடன் திருமணம் செய்து கொண்டதால் துக்கம் தாங்க முடியாமல் தூக்கிட்டு தற்கொலை
உறவினரிடம் தன் மானம் போய்விடும் என்று தன்னை மாய்த்துக் கொண்ட வாலிபர்
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ரவி மகன் ராஜேஷ் (31) என்ஜினியரிங் முடித்து விட்டு மாலத்தீவில் உள்ள ஒரு ரிசார்ட்டில் முதுநிலை என்ஜினியராக பணிபுரிந்து வந்தார். இவருக்கும் ராணிப்பேட்டை மாவட்டம் விளாப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த சங்கர் மகள் புவனேஸ்வரி (29) என்பவருக்கும் கடந்த மாதம் 26-ந்தேதி திருமண நிச்சயதார்த்தம் விளாப்பாக்கத்தில் நடைபெற்று ஏப்ரல் மாதம் 26-ந் தேதி மேல்மலையனூரில் திருமணம் நடைபெறுவதாக இருந்தது.
இந்நிலையில் திருமணத்துக்கு ஒரு மாதம் இருப்பதால் ராஜேஷ் மாலத்தீவுக்கு சென்று ஒரு மாதம் விடுமுறை கேட்டு விட்டு வருவதாக சென்றுள்ளார்.
இந்நிலையில் ராஜேஷிடம், புவனேஸ்வரி கடந்த 14-ந்தேதி இரவு செல்போனில் தொடர்பு கொண்டு தான் அதே ஊரைச் சேர்ந்த வேறு ஒரு நபரை காதலிப்பதாகவும் அவரை தான் திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் பேசிவிட்டு போனை துண்டித்துள்ளார்.
இதனால் மனமுடைந்து போன ராஜேஷ் மாலத்தீவில் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு சென்று மரத்தில் தொங்கிய ஒரு கம்பியில் தூக்கு மாட்டிக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து தகவலறிந்த மாலத்தீவு போலீசார் ராஜேஷின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனை செய்து இந்திய தூதரகத்தில் ஒப்படைத்தனர்.
பின்பு அங்கிருந்து விமானம் மூலம் நேற்று இரவு சென்னைக்கு அனுப்பி வைத்தனர்.
இன்று சொந்த ஊரான மேல்மலையனூருக்கு ராஜேஷின் உடல் கொண்டு வரப்பட்டு தகனம் செய்யப்பட்டது.
நிச்சயதார்த்தம் நடைபெற்று திருமணத்திற்கு இன்னும் ஒரு மாதமே இருக்கும் சூழ்நிலையில் நிச்சயம் செய்யப்பட்ட பெண் ஏமாற்றியதால் ராஜேஷ் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் ராஜேஷின் தாய் பூங்கொடி செஞ்சி துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தன் மகன் தற்கொலைக்கு தூண்டிய நபர்கள் மீது நடவடிக்கை கோரி புகார் அளித்துள்ளார்.