திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் சுவாமி கோயிலில் திருக்கல்யாண வைபவம். திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருவெண்காட்டில் பிரம்ம வித்யாம்பிகை உடனாகிய சுவேதாரண்யேஸ்வரர் சுவாமி கோவில் உள்ளது. இக்கோயிலில் தனி சன்னதியில் அகோர மூர்த்தி சுவாமி, புதன் பகவான் அருள்பாலித்து வருகின்றனர்.
காசிக்கு இணையான ஆறு ஸ்தலங்களில் இக்கோவில் முதன்மையான தலமாக விளங்குகிறது. கோவில் உள்ள முக்குலங்களில் நீராடி ருத்ர பாதத்தில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபட்டால் மிகவும் சிறப்பு என்பதால் கோவிலுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதியிலிருந்து பக்தர்கள் நாள்தோறும் வருகை புரிந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர். இக்கோயிலில் கடந்த 21ம் தேதி இந்திர விழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் 7ம் நாள் முக்கிய நிகழ்வாக திருக்கல்யாண உற்சவம் இன்று இரவு நடைபெற்றது.
முன்னதாக பக்தர்கள் சீர்வரிசை எடுத்துக் கொண்டு ஊர்வலமாக கோவிலை வந்தடைந்தனர். தொடர்ந்து மாலை மாற்றும் நிகழ்வு நடைபெற்றது, மணமேடை முன்பாக வேத விற்பனர்கள் மந்திரம் முழங்க சிறப்பு யாகம் செய்யப்பட்டு திருக்கல்யாண சடங்குகள் தொடங்கியது. பின்னர் திருமாங்கல்யம் அணிவித்து சிவாச்சாரியார் திருக்கல்யாணத்தை நடத்தி வைத்தார். இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து புஷ்ப அலங்காரத்தில் சுவாமி அம்மன் வீதி உலா நடைபெற்றது.