மேகதாது அணை கட்டுமான பணிக்கு மறைமுகமாக துணை போகும் மத்திய மாநில அரசுகளை கண்டித்து திருவாரூரில் விவசாயிகள் உண்ணாவிரதம்
கர்நாடக முதல்வர் சித்தராமையாவும், நீர் பாசன துறை அமைச்சர் வி.கே சிவக்குமாரும் தமிழகம் நோக்கி செல்லும் உபரி நீரை தடுத்து மேகதாட்டு அணை கட்டி தமிழக விவசாயிகளுக்கு எதிராக பேசி வருகின்றனர்.
நீர்ப்பாசன துறை அமைச்சர் சிவக்குமார் மேகதாட்டு அணை கட்டுவதற்காகவே நீர்பாசனத்துறையின் அமைச்சராக பொறுப்பேற்றதாக சபதம் ஏற்று பேசுவது தமிழக விவசாயிகளை மிகுந்த கோபத்திற்கும் அச்சத்திற்கும் தள்ளியுள்ளது.
இந்நிலையில் மேகதாட்டு அணை கட்டுமான பணியை தடுத்து நிறுத்த சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தியும் காவிரி மேலாண்மை ஆணையம் மேகதாது அணை கட்டுவதற்கு கருத்து கேட்டு மத்திய அரசு அனுப்பி உள்ள தீர்மானத்தை சட்ட விரோதமானது என அறிவித்து தமிழ்நாடு அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றி உச்சநீதிமன்றத்திற்கும் மத்திய அரசிற்கும் அனுப்பி அவசர சட்ட நடவடிக்கை எடுத்திட வேண்டும், மேலும் தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலைத்துறை மேம்பாட்டு ஆணையம் அமைத்து கிராமப்புற சாலைகளுக்கெல்லாம் சுங்கவரி வசூலிக்கும் அவசர சட்டத்தை ரத்து செய்ய வேண்டும்.
நெல் குவிண்டால் ஒன்றுக்கு 3500 கரும்பு டன் ஒன்றுக்கு 5500 வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூர் ரயில் நிலையம் முன்பு தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் பி.ஆர் பாண்டியன் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.