நாடாளுமன்றத்தில் திமுக வெளிநடப்பு
கடந்த ஜனவரி 31ஆம் தேதி குடியரசுத் தலைவர் உரையுடன் நாடாளுமன்ற பட்ஜெட் இடைக்கால கூட்டத்தொடர் தொடங்கியது. பிப்ரவரி 1ஆம் தேதி 2024ஆம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அதற்கு அடுத்ததாக நாடாளுமன்ற வழக்கமான நிகழ்வுகளுக்காக கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது.
நேற்றுடன் நிறைவு பெற்று விடும் என அறிவிக்கப்பட்ட கூட்டத்தொடரானது இன்று ஒரு நாள் கூடுதலாக நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடர் தான் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஆளும் பாஜக அரசின் கீழ் நடைபெறும் கடைசி கூட்டத்தொடரின் கடைசி நாளாகும்.
தமிழக மீனவர்கள் குறித்து விவாதம் நடத்த கோரி திமுகவினர் கோரிக்கை ஏற்கப்படாத நிலையில் திமுகவினர் மக்களவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். இது குறித்து திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழக மீனவர்கள் இலங்கை கடல் படையால் தொடர்ந்து கைது செய்யப்படுவது குறித்து விவாதிக்க ஒத்திவைப்பு தீர்மானத்தை கொண்டு வந்தோம். அதில் 88 தமிழக மீனவர்கள் 12 மீனவ படகுகளை இலங்கை கடப்படையினர் சிறைபிடித்ததற்கு குறித்து விவாதிக்க கோரினோம்.
இந்த ஒத்திவைப்பு தீர்மானத்தை சபாநாயகர் ஏற்க மறுத்தார். இதனை அடுத்து தான் நாங்கள் வெளிநடப்பு செய்தோம் என திமுக எம்பி டி.ஆர்.பாலு நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இதே பிரச்சனை தொடர்பாக, மக்களவையை தொடர்ந்து மாநிலங்களவையில் இருந்தும் திமுக எம்பிக்கள் வெளிநடப்பு செய்தனர்.