நாமக்கல் நஞ்சை இடையாறு பூ குண்டம் திருவிழா
பரமத்தி வேலூர் அருகே நன்செய் இடையாற்றில் அக்னி மாரியம்மன் கோயிலில் தீமிதி திருவிழாவில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆண்கள் தீ மிதித்தும் ஆயிரத்துக்கு மேற்பட்ட பெண்கள் பூ வாரி போட்டுக் கொண்டும் அம்மனுக்கு நேர்த்திக்கடனை செலுத்தினார்கள்.
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலுார் அருகே நன்செய் இடையாற்றில் பிரசித்தி பெற்ற அக்னி மாகா மாரியம்மன் கோயில் உள்ளது. வருடம் தோறும் மார்ச் மாதம் திருவிழா நடத்துவது வழக்கம்.
அதேபோல் கடந்த 9ஆம் தேதி மாரியம்மன் கோயிலில் கம்பம் ஊன்றி, காப்பு கட்டுதலுடன் திருவிழா தொடங்கியது.
திருவிழாவில் 23 ம் தேதி வடிசோறு படைத்தலும், இன்று திருவிழாவின் முக்கிய நிகழ்வாக தீமிதி திருவிழா வெகு விமர்சியாக நடைபெற்றது இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் மாலை அணிந்து கொண்டு கடந்த 15 நாட்களாக கடும் விரதம் இருந்து தினமும் அம்மனை வழிபட்டு வந்தனர்.
இதில் அம்மன் கோவில் முன்பு அமைக்கப்பட்டு இருந்த 63 அடி நீளமுள்ள பூக்குளியில் ஆண்கள் தீ மிதித்தும்,பெண்கள் பூவாரி போட்டுக் கொண்டும் நேர்த்திக்கடனை செலுத்திய பின்னர் வெண்ணைக் காப்பு சாற்றப்பட்ட மூலவர் அம்மனை வணங்கிச் சென்றனர்.
நாளை 25 ம் தேதி கிடாவெட்டு, மாவிளக்கு பூஜையும், 26 ம் தேதி மஞ்சள் நீராடலுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.
அக்னி மாகா மாரியம்மன் திருவிழாவின் ஏற்பாடுகளை கோயில் தர்மகர்த்தாக்கள் மற்றும் நிர்வாகத்தினர், ஊர் பொதுமக்கள் ஏற்பாடு செய்து வருகின்றனர்.