பழனி மலையடிவாரத்தில் கடைகளை அடைத்து வியாபாரிகள் போராட்டம்- கிரிவலப் பாதை அடைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பழனியில் அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் நிர்வாகத்தை கண்டித்து வியாபாரிகள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மலை அடிவாரத்தில் நீதிமன்ற உத்தரவின் பேரில் கோயில் நிர்வாகம் ஆக்கிரமிப்புகளை கண்டறிந்து அகற்றி வருகிறது. மேலும் கிரிவலப் பாதையில் எந்த வாகனங்களையும் நுழைய கூடாது, கிரிவலப்பாதையில் வர்த்தக நிறுவனங்கள் கடைகள் செயல்படவும் அனுமதிக்க கூடாது என நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதைத்தொடர்ந்து கிரிவல போதையில் வாகனங்கள் நுழையக்கூடிய சாலைகளில் தடுப்புகள் வைத்து கோயில் நிர்வாகத்தால் தடுக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக கிரிவலப் பாதையில் சொந்த வீடுகளுக்கும், தங்கும் விடுதிகளுக்கும், கடைகளுக்கும் வாகனங்களை எடுத்துச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கிரிவலப் பாதையில் தடுப்புகள் ஏற்படுத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து வியாபாரிகள் இன்று கடை அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மலையடிவாரத்தில் பஞ்சாமிர்த கடைகள், பேன்சி பொருட்கள் விற்பனை செய்யப்படும் கடைகள், பூஜை பொருட்கள் விற்பனை செய்யப்படும் கடைகள், உணவங்கள், தேனீர் கடைகள் அடைக்கப்பட்டுள்ளதால் பக்தர்கள் பொருட்கள் வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் அடிவாரப் பகுதியில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளதால் சாலைகள் வெறிச்சோடி காணப்படுகிறது.