புதுச்சேரியில் பணி நீக்கம் செய்யப்பட்ட பொதுப்பணித்துறை ஊழியர்கள் மீண்டும் பணி வழங்க கோரி சட்டப்பேரவையை முற்றுகையிட பேரணியாக சென்ற போது அண்ணா சிலை அருகே போலீசார் தடுத்து நிறுத்தி வலுக்கட்டாயமாக இழுத்து சென்று கைது செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
புதுச்சேரியில் 2015-ம் ஆண்டு பொதுப்பணித்துறையில் 2642 பேர் பணிக்கு அமர்த்தபட்டனர். தேர்தல் நடத்தை விதிமுறை அமலில் இருக்கும் போது பணிக்கு அமர்த்தபட்டதால் தேர்தல் ஆணையத்தால் 2016 ஆம் ஆண்டு 2642 பேரும் பணிநீக்கம் செய்யப்பட்டனர்.
இவர்கள் மீண்டும் பணி வழங்க வலியுறுத்தி பல கட்ட போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். ஆனால் கடந்த 8 ஆண்டுகளாக இவர்களுக்கு பணி வழங்கவில்லை. இந்த நிலையில் கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் பணி நீக்கம் செய்யப்பட்ட 2642 பேருக்கும் மீண்டும் பணி வழங்கப்படும் என்றும் அவர்களுக்கு மாதம் 10 ஆயிரம் ரூபாய் ஊதியம் வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்திருந்தார்.
ஆனால் இதுவரை அந்த அறிவிப்பு செயல்படுத்தப்படவில்லை இதனை கண்டித்தும் மீண்டும் பணி வழங்க வேண்டும் என வலியுறுத்தி பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் புதுச்சேரி சுதேசி பஞ்சாலை அருகே தொடர் பேராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் 3-வது நாளான இன்று பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் சங்கத் தலைவர் தெய்வீகன் தலைமையில் 500-க்கும் மேற்பட்டோர் சட்டப்பேரவையை முற்றுகையிட பேரணியாக சென்றனர். அண்ணாசிலை முன்பு போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதனை தொடர்ந்து ஊழியர்கள் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனையடுத்து அங்கு பாதுகாப்பில் இருந்த போலீசார் மறியலில் ஈடுபட்ட பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களை வலுக்கட்டாயமாக இழுத்து சென்று வேனில் ஏற்றி கைது செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
முதலமைச்சர் அறிவித்தது போல மாதம் பத்தாயிரம் ரூபாய் ஊதியம் மற்றும் பணி நீக்கம் செய்யப்பட்டவர்களுக்கு மீண்டும் வேலை உடனடியாக வழங்க வில்லை என்றால், வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலை புறக்கணிக்க போவதாக அவர்கள் எச்சரிக்கை விடுத்தனர்.