போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் ரயிலில் அதிரடி சோதனை…
போதை பாக்குகள் பறிமுதல்….
புதுச்சேரியில் கடந்த சில காலமாக கஞ்சா விற்பனை அதிகரித்துள்ளது.. மேலும் கஞ்சா போன்ற போதை பொருட்கள் பயன்படுத்துவதால் குற்றச்செயல்களில் இளைஞர்கள் ஈடுபடுகின்றனர். சில நாட்களுக்கு முன்னர் நடைபெற்ற முத்தியார்பேட்டை சிறுமி கொலை வழக்கில் கஞ்சா உபயோகித்த 2 பேர் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து கஞ்சாவை ஒழிக்க போலீசார் அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
கஞ்சா பொருட்களின் நடமாட்டத்தை தடுக்க ஆபரேஷன் விடியல் தொடங்கப்பட்டு, கஞ்சா விற்போர் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.புதுச்சேரியில் விற்பனை செய்யப்படும் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் பெரும்பாலும் வடமாநிலத்தில் இருந்தே கொண்டு வரப்படுகிறது. புதுச்சேரிக்கு வரும் கூலி தொழிலாளிகள், வடமாநிலத்தவர் உதவியுடன் ரயில் மூலம் புதுச்சேரி கொண்டு வரப்படுகிறது.
இந்நிலையில், இன்று காலை புவனேஸ்வரில் இருந்து புதுச்சேரி வந்த ரயிலை போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். ஆய்வாளர் தனசேகர் உதவி ஆய்வாளர் ஜாகீர்உசேன் மற்றும் ரயில்வே போலீசார் மோப்ப நாய் பைரவம் உதவியுடன் சோதனை நடத்தினர். அவர்கள் ரயிலில் இருந்து இறங்கிய பயணிகளின் உடமைகளை சோதனையிட்டனர். இந்த சோதனையில் கஞ்சா எதுவும் பறிமுதல் செய்யப்படவில்லை. ஆனால் ரயிலில் புதுச்சேரி வந்த கூலி தொழிலாளர்கள் சிலரிடம் பண்டல் பண்டலாக போதை பாக்குகள் பறிமுதல்செய்யப்பட்டன. போதை பாக்குகள் கொண்டு வந்த சிலரை போலீசார் கைது செய்து காவல்நிலையம் அழைத்து சென்றனர். போலீசார் சோதனையிடுவதை அறிந்த வடமாநிலத்தில் இருந்து வந்திருந்த சிலர் தாங்கள் கொண்டு வந்திருந்த குட்கா, புகையிலை போன்ற போதை பொருட்களை அப்படியே போட்டுவிட்டு தப்பினர். இதனால் ரயில் நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது