மயிலம் முருகன் கோவில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே மயிலத்தில் உள்ள மலை மீது பிரசித்தி பெற்ற முருகன் கோவில் அமைந்துள்ளது. இங்கு முருகப்பெருமான் வள்ளி, தெய்வானையுடன் திருமணக்கோலத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்து வருகிறார். சிறப்பு வாய்ந்த இக்கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திர திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும்.
அதன்படி இந்த ஆண்டுக்கான பங்குனி உத்திர திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, மூலவரான முருகனுக்கு பால், தயிர், இளநீர் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் மூலம் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் தங்க கவசம் அணிந்து மலர் அலங்காரத்தில் வள்ளி, தெய்வானையுடன் முருகன் பக்தர் களுக்கு அருள் பாலித்தார். தொடர்ந்து உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டது.
அதன்பிறகு காலை 6.45 மணியளவில் வள்ளி, தெய்வானையுடன் வெள்ளி கவசத்தில் விநாயகர், சண்டிகேஸ்வரர் ஆகியோர் பல்லக்கில் அங்குள்ள கொடிமரம் முன்பு எழுந்தருளினர். பின்னர் கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதையடுத்து காலை 7 மணிக்கு அர்ச்சகர்கள் வேத மந்திரங்கள் முழங்க மயிலம் பொம்மபுர ஆதீனத்தின் 20-ம் பட்ட சிவஞான பாலய சுவாமிகள் மயில் உருவம் பொறிக்கப்பட்ட துவஜா யோகம் என்னும் கொடியை ஏற்றினார். அப்போது அங்கு கூடியிருந்த பக்தர்கள் கந்தனுக்கு அரோகரா முருகனுக்கு அரோகரா என்ற பக்தி கோஷங்களை எழுப்பி சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து கொடிமரத்துக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.விழாவில் விழுப்புரம், கடலூர் மற்றும் புதுச்சேரி உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.மேலும் விழாவையொட்டி தினமும் பல்வேறு வாகனங்களில் சாமி வீதிஉலா நடைபெற இருக்கிறது. விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் 23ஆம் தேதி காலை பங்குனி உத்திரத்தன்று காலை 6 மணிக்கு நடக்கிறது. 24 ஆம் தேதி தெப்ப உற்சவமும் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை மயிலம் பொம்மபுர ஆதீனம் 20-ம் பட்ட சிவஞான பாலய சுவாமிகள் செய்து வருகிறார்.