மகிழ்ச்சியில் கடலில் மிதந்த மாற்றுத்திறனாளி மாணவர்கள்
ஓ . . கடல்ன்னா இப்படித்தான் இருக்குமா ? முதன்முதலில் கண்பார்வையற்ற குழந்தைகளை அலையில் கால் நினைக்கவைத்து மகிழ்ச்சியில் ஆழ்த்திய தொண்டு நிறுவனம் ; நாகையில் நெகிழ்ச்சி செய்தி தொகுப்பு
தஞ்சை மேம்பாலம் பகுதியில் செயல்படும் பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவிகள் , சாதாரண மாணவர்களைப் போல் தாங்களும் கடலினுள் சென்று காலைநனைத்து தண்ணீரில் மிதந்து அதன் அனுபவத்தை பெற ஆசைப்பட்டனர். இதனை செயல்படுத்தும் வகையில் தஞ்சை ஜோதி அறக்கட்டளை சார்பில் ஒரு நாள் சுற்றுலாவானது பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு மேல்நிலைப்பள்ளி மாணாக்கர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது . இதன்படி தஞ்சையிலிருந்து இரண்டு பேருந்துகளில் பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவிகள் , ஆசிரியர்கள் , அலுவலக பணியாளர்கள் என 120 நபர்கள் நாகை மாவட்டம் வேளாங்கண்ணிக்கு அழைத்து வரப்பட்டனர் .
வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா தேவாலயத்தில் நடைபெற்ற பிரார்த்தனை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர் மாணாக்கர்கள் உற்சாகமாக கடற்கரைக்கு அழைத்துச்செல்லப்பட்டனர். தகுந்த முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளுடன் ஒவ்வொரு மாணவராக கடலில் இறங்கி, முதன் முதலாக தங்கள் கால்களில் கடல் அலைகள் உரசிச்சென்றதை உணர்ந்து மகிழ்ந்தனர். கடல் அலைகளை தொட்டுப்பார்த்து மகிழ்ந்த கண்பார்வையற்ற குழந்தைகள், தங்கள் வாழ்நாளில் இப்போது தான் முதல்முறையாக கடற்கரைக்கு சுற்றுலா வந்து கடலில் இறங்கி மகிழ்ந்ததாகவும் இந்த ஏற்பாடு தங்களுக்கு புது அனுபவமாக இருந்ததாகவும் மற்ற மாணவர்களை போல் தங்களும் கடலில் இறங்க வாய்ப்பு கிடைக்குமா என்ற ஏக்கத்துடன் இருந்த நிலையில் இப்படிப்பட்ட சுற்றுலா தங்களை மிகவும் ஆச்சர்யப்படுத்தியது என்றும் கூறினர்.
முன்னதாக சிக்கல் சிங்காரவேலர் கோவிலிலும் பார்வை மாற்றுத்திறன் மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவிகள் இறை வழிபாடு மேற்கொண்டனர் .
நாகப்பட்டினம் மாவட்ட செய்தியாளர் சீனிவாசன்
பேட்டி: 1.பிரபு ராஜ்குமார் ஜோதி அறக்கட்டளை நிர்வாகி
பேட்டி: 2.கார்த்தி மாற்றுத்திறனாளி மாணவர்
பேட்டி: 3 இளமுருகன் மாற்றுத்திறனாளி மாணவர்