வாழ்த்தியவர்களுக்கு நன்றி பிரிட்டன் மன்னர் சார்லஸ்
புற்றுநோயிலிருந்து தான் குணமடைய வாழ்த்தியவர்களுக்கு பிரிட்டன் மன்னர் சார்லஸ் நன்றி தெரிவித்துள்ளார்.
பிரிட்டன் மன்னர் சார்லஸ் (75) புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருப்பது கடந்த வாரம் கண்டறியப்பட்ட நிலையில், அவர் குணமடைய வேண்டும் என்று பிரிட்டன் மக்கள் அவருக்கு நாள்தோறும் வாழ்த்துச் செய்தி அனுப்பி வருகின்றனர்.
இந்த வாழ்த்துகளால் நெகிழ்ந்த மன்னர் சார்லஸ், நாட்டு மக்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். அவரது செய்தியை பக்கிங்ஹாம் அரண்மனை ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டது.
அதில், இந்த நோயால் ஏற்பட்ட அனுபவத்தின் மூலம், உலகெங்கும் புற்றுநோய் தடுப்பு மற்றும் சிகிச்சை அமைப்புகள் ஆற்றிவரும் அளப்பரிய பணி குறித்து என்னால் அறிய முடிகிறது. நான் குணமடைவதற்காக வாழ்த்தியவர்களுக்கு நன்றி. இதுபோன்ற அன்பும், ஊக்கமும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மிகப்பெரிய ஆதரவாக இருக்கும் என மன்னர் தெரிவித்துள்ளார்.
மன்னர் சார்லஸ்க்கு எந்த வகையான புற்றுநோய் ஏற்பட்டுள்ளது என்ற விவரம் வெளியிடப்படவில்லை. ஆனால், அவரைப் பாதித்துள்ள புற்றுநோய் ஆரம்பநிலையிலேயே கண்டறியப்பட்டுவிட்டது என பிரதமர் ரிஷி சுனக் ஏற்கெனவே தெரிவித்திருந்தார்.
பிரிட்டன் அரசியாக இருந்த எலிசபெத் கடந்த 2022 இல் மறைந்ததைத் தொடர்ந்து நாட்டின் மன்னராக சார்லஸ் முடிசூடினார்.