1 1/2 லட்சத்தை பறக்கும்படை அதிகாரிகள் பறிமுதல் செய்ததால் பரபரப்பு
நாடு முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 19-ந்தேதி நடைபெற உள்ளது.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதையடுத்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தது.
இதையடுத்து நாகை மாவட்டம் முழுவதும் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா மற்றும் பரிசுப் பொருட்கள் எடுத்துச் செல்லப்படுகிறதா? என்று பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு சோதனையில் ஈடுபட தொடங்கி விட்டனர்.
இதற்காக நாகை மாவட்டத்தில் உள்ள 3 சட்டமன்ற தொகுதியில் தலா 1 சட்டமன்ற தொகுதிக்கு 9 பறக்கும் படை, 9 நிலையான கண்காணிப்பு குழுவினர் அதிநவீன கேமரா பொருத்தப்பட்ட வாகனங்கள் மூலம் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட தொடங்கினர்.
இந்த நிலையில் நாகூர் வெற்றாற்று பாலம் அருகே காரைக்காலில் இருந்து நாகை நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்த நபரை பறக்கும் படை தாசில்தார் வடிவழகன் தலைமையிலான அதிகாரிகள் மறித்து சோதனை செய்தனர்.
சோதனையில், எந்தவித ஆவணமும் இன்றி ரூ. 1 லட்சத்து 53 ஆயிரத்து 400 எடுத்து வந்தது தெரிய வந்தது. இதுயடுத்து மோட்டார் சைக்கிளில் வந்தவரிடம் விசாரணை நடத்திய போது, அவர் காரைக்கால் தனியார் பள்ளியில் கணக்கராக பணிபுரிந்து வந்த வெளிப்பாளையத்தை சேர்ந்த வெங்கடேசன் என்பதும், பள்ளி மாணவர்களின் கட்டண தொகையை எந்தவித ஆவணங்களும் இன்றி மோட்டார் சைக்கிளில் எடுத்து வந்ததும் தெரிய வந்தது.
இதையடுத்து வெங்கடேசனிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை நாகை தலைமை இடத்து துணை தாசில்தார் தனஜெயனிடம் பறக்கும் படையினர் ஒப்படைத்தனர்.
நாகையில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் ரூ.1 1/2 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.