ஆவணங்கள் இல்லாமல் கொண்டு சென்ற 100 கோடி பறிமுதல்
மக்களவைத் தேர்தலில் உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்துச் செல்லப்பட்ட ரொக்கத் தொகை உள்பட பறிமுதல் செய்யப்பட்டவற்றின் மதிப்பு ரூ.100 கோடியைத் தாண்டியுள்ளது.
இது நேற்று காலை 9 மணி நிலவரம் என்று தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தார்.
தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுக்கான நடத்தை விதிமுறைகள் கடந்த 16}ஆம் தேதி முதல் அமலுக்கு வந்தன. இதைத் தொடர்ந்து, தீவிர வாகனச் சோதனைகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது.
நிலையான கண்காணிப்புக் குழுக்கள், பறக்கும் படைகள் ஆகியன வாகனச் சோதனைகளை நடத்தி வருகின்றன. உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்துச் செல்லப்பட்ட ரொக்கப் பணம் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், கடந்த 16}ஆம் தேதி முதல் மார்ச் 29 காலை 9 மணி வரையில் மட்டும் பறிமுதல் செய்யப்பட்டவற்றின் மொத்த மதிப்பு ரூ.100 கோடியைத் தாண்டியுள்ளது.
உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்துச் செல்லப்பட்ட ரூ.43.64 கோடி ரொக்கத் தொகையும், ரூ.2.17 கோடி மதிப்பிலான மதுபானங்களும், ரூ.61.51 லட்சம் மதிப்பிலான போதைப் பொருள்களும், ரூ.54.29 கோடி மதிப்பிலான ஆபரணங்களும், 1.09 கோடி மதிப்பிலான பரிசுப் பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இவற்றின் மொத்த மதிப்பு ரூ.101.82 கோடி என்று தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார்.