புதுச்சேரியில் இன்று தொடங்கிய 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை 15,950 மாணவ மாணவிகள் எழுதி வருகின்றனர்.
புதுச்சேரி மற்றும் காரைக்கால் பிராந்தியத்தில் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு இன்று தொடங்கி ஏப்ரல் 8-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்காக புதுச்சேரியில் 37 தேர்வு மையங்கள், காரைக்கால் பகுதியில் 12 தேர்வு மையங்கள் என 49 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. புதுச்சேரியில் 84 அரசுப் பள்ளிகள், 23 அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் 122 தனியார் பள்ளிகள் என மொத்தம் 229 பள்ளிகளைச் சேர்ந்த 12,613 மாணவர்களும், 599 தனித் தேர்வர்களும் தேர்வெழுதுகின்றனர். அதேபோல் காரைக்கால் பகுதியில் 25 அரசுப் பள்ளிகள், 6 அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் 29 தனியார் பள்ளிகள் என மொத்தம் 60 பள்ளிகளைச் சேர்ந்த 2,479 மாணவர்களும், 259 தனித் தேர்வர்களும் தேர்வெழுதுகின்றனர். தேர்வு நடைபெறும் நாட்களில் தேர்வெழுத வருகை தரும் மாணவர்கள் அலைபேசி (Mobile Phone) மற்றும் எந்தவொரு தகவல் தொடர்பு சாதனங்களையும் எடுத்துவர தடை செய்யப்பட்டுள்ளது.
மேலும் தேவையான பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.