புதுச்சேரியில் மிகவும் பிரசித்தி பெற்ற வில்லியனூர் லூர்து மாதா தேவாலயத்தின் 147வது ஆண்டு பெருவிழாவையொட்டி நடைபெற்ற ஆடம்பர தேர்பவனியில் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர்
புதுச்சேரி வில்லியனூரில் பிரசித்திபெற்ற தூய லூர்து மாதா ஆலயம் உள்ளது. பிரான்சு நாட்டின் லூர்து நகருக்குப்பின் உலகிலேயே லூர்து மாதாவிற்கு என்று கட்டப்பட்ட 2-வது ஆலயம் இந்த ஆலயமாகும். இந்த ஆண்டிற்கான திருவிழா கடந்த மாதம் 6ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனை தொடர்ந்து நவ நாட்களில் காலை, மாலை இரு வேளைகளிலும் சிறப்பு திருப்பலிகள் நடைபெற்றது. மேலும் சிறிய தேர்பவனியும் நடைபெற்று வந்தது. விழாவின் முக்கிய நிகழ்வான இன்று, மலர்களால் அலங்கரிக்கப்பட்ட தேரில் வைரகீரிடம் அணிவிக்கப்பட்ட மாதாவின் சொரூபம் வைக்கப்பட்டு சிறப்பு பிரார்த்தனை செய்யப்பட்டு ஆடம்பர தேர்பவனி நடைபெற்றது.
முக்கிய வீதிகளின் வழியாக சென்ற தேர் மீண்டும் ஆலயத்தை வந்தடைந்தது. தேர் பவனியில் புதுச்சேரி, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான கிறிஸ்துவர்கள் கலந்துகொண்டனர். நூற்றுக்கணக்கான போலீசார் பக்தர்களுக்கான பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.