உரிய ஆவணமின்றி கொண்டுவரப்பட்ட 16.7 கிலோ தங்க நகைகள் பறிமுதல்
மதுரையிலிருந்து நாகர்கோவில், மார்த்தாண்டம் பகுதியில் உள்ள பல்வேறு நகைக்கடைகளுக்கும், இதே போல் மதுரையிலிருந்து சிவகாசி, ராஜபாளையம் ஆகிய பகுதிகளில் உள்ள பல்வேறு நகைக்கடைகளுக்கும் உரிய ஆவணமின்றி 3 தனியார் கூரியர் வாகனத்தில் கொண்டு சென்ற 16.7 கிலோ தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டு கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.
விருதுநகர் சத்திரெட்டியாபட்டி விலக்கு அருகே தேர்தல் பறக்க்கும்படை அதிகாரி பொன்னு கணேஷ் தலைமையில் சார்பு ஆய்வாளர் மாரியப்பன், தலைமை காவலர்கள் சரோஜா, சதீஷ் பாபு குழுவினர் சோதனையில் ஈடுபட்டனர் .
அப்போது அவ்வழியே வந்த தனியார் கூரியர் வாகனங்களை நிறுத்தி சோதனை செய்தனர்.
மதுரையில் உள்ள தனியார் கூரியர் ஏஜென்ஜி மூலம் 6.8 கிலோ தங்க நகைகளை நாகர்கோவிலுக்கு கொண்டு செல்வதாக கூறினர் உரிய ஆவணம் இல்லை. இதே போல் அதே கூரியர் நிறுவனத்தைச் சேர்ந்த மற்றொரு வாகனத்தில் நாகர்கோவிலில் மற்றும் மார்த்தாண்டம் பகுதியில் உள்ள பல்வேறு நகை கடைகளுக்கு 4.7 கிலோ கொண்டு சென்றதாக தெரிவித்தனர். ஆனால் உரிய ஆவணங்கள் அவர்களிடம் இல்லை.
இதனையடுத்து நகைகள் கொண்டு வரப்பட்ட பார்சல்களை பறிமுதல் செய்து விருதுநகர் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர். பின்னர் நகைகள் விருதுநகர் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.
இதே போல் அதே சோதனை சாவடியில் நிலைக் கண்காணிப்பு குழு அலுவலர் சுப்பிரமணிய பாண்டியன் தலைமையில் எஸ்.எஸ்.ஐ. கருப்பசாமி ,தலைமை காவலர்கள் அடைக்கலம், சித்ரா குழுவினர் மற்றொரு வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர்.
மதுரையிலிருந்து சிவகாசி ராஜபாளையம் ஆகிய பகுதிகளில் உள்ள பல்வேறு நகைக்கடைகளுக்கு 5.2 கிலோ தங்க நகைகளை கொண்டு செல்வதாக தெரிவித்தனர். உரிய ஆவணங்களை காட்டவில்லை. இதனையடுத்து பறிமுதல் செய்யப்பட்டு விருதுநகர் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.. உதவி தேர்தல் அலுவலர் கார்த்திகேயினி முன்னிலையில் நகைகள் எடை பார்க்கப்பட்டு கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.