துறையூர் மதுராபுரியில் இரண்டு வீடுகளில் 17 சவரன் தங்க நகை இருபதாயிரம் ரொக்கம் திருட்டு
திருச்சி மாவட்டம் துறையூர் மதுராபுரி பகுதியில் அருகருகே இரண்டு வீடுகளில் 17 சவரன் தங்க நகை இருபதாயிரம் ரொக்கம் திருட்டு
திருச்சி மாவட்டம் துறையூர் மதுராபுரி புது தெருவை சேர்ந்தவர் வகிதா இவரது கணவரான அபூபக்கர் குவைத் நாட்டில் டிரைவராக பணிபுரிந்து வரும் நிலையில், வகிதா தனது குழந்தைகளுடன் தனியே வசித்து வருகிறார்.
இந்நிலையில் வகிதா கடந்த சில தினங்களுக்கு முன்பு சமயபுரம் அருகே உள்ள ஈச்சம்பட்டி கிராமத்திற்கு தனது குழந்தைகளுடன் சென்றுள்ளார். இந்நிலையில் இன்று காலை வகிதாவின் வீடு திறந்து கிடப்பதாக அக்கம் பக்கத்தினர் வகிதாவிற்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலின் பேரில் வீடு திரும்பிய வகிதா வீட்டின் உள்ளே சென்று பார்த்த பொழுது , பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த சுமார் 17 பவுன் தங்க நகைகள் மற்றும் பணம் ரூபாய் 20,000 ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இச்சம்பவம் தொடர்பாக வகிதா துறையூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். தகவலின் பேரில் அங்கு சென்ற துறையூர் போலீசார் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு, அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை கொண்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேபோன்று வகிதாவின் வீட்டிற்கு அருகில் வசிப்பவர் பாத்திமா இவரது கணவரும் குவைத்தில் பணிபுரிந்து வரும் நிலையில், பாத்திமா தனது குழந்தைகளுடன் தனியே வசித்து வருகிறார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது தாய் வீடான செந்தாரப்பட்டி கிராமத்திற்கு சென்றுள்ளார். இந்நிலையில் இன்று காலை வீடு திரும்பிய பாத்திமா தனது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோ திறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
ஆனால் வீட்டுக்குள் விலைமதிப்புள்ள பொருட்கள் எதுவும் இல்லாததால் மர்ம நபர்கள் பீரோவில் இருந்த பொருள்களை சிதறடித்துவிட்டு சென்றுள்ளது தெரியவந்தது. துறையூர் அருகே வீட்டில் பல லட்சம் மதிப்புள்ள தங்க நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.