17,000 வாசகர்கள் நூலகங்களில் படித்து பயனடைந்து வருகின்றனர் மாவட்ட ஆட்சியர் பேச்சு
நாகை மாவட்டத்தில் நாளொன்றுக்கு 17,000 வாசகர்கள் நூலகங்களில் படித்து பயனடைந்து வருகின்றனர்; நாகையில் நடந்த திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா ஆண்டின் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் பேச்சு
கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவு பெற்றதை அடுத்து வெள்ளி விழா தமிழக அரசு சார்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
அதன்படி திருவள்ளுவர் தொடர்பான கண்காட்சிகள் இன்று முதல் ஒரு வாரத்திற்கு நடத்தப்பட உள்ளது. அதன்படி திருவள்ளுவர் 133 அடி உயர சிலை நிறுவிய வெள்ளி விழா நாகை மாவட்ட மைய நூலகத்தில் இன்று நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் நாகை மாலி, மீன் வளர்ச்சி கழகத் தலைவர் கௌதமன் ஆகியோர் பங்கேற்று திருவள்ளுவரின் சிறப்புகளை குறித்து உரையாற்றினார்கள்.
விழாவில் பேசிய நாகை மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் கூறுகையில் ; வள்ளுவரின் வரலாறு மற்றும் திருக்குறளை அனைவரும் கட்டாயம் அறிந்திருக்க வேண்டும் என்றும், வள்ளுவரின் சிறப்புகள் குறித்த கண்காட்சி நாகை மாவட்டத்தில் இன்றுமுதல் 7 நாட்கள் நடைபெறும் என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், நாகை மாவட்ட நூலகம் மட்டுமின்றி மாவட்டம் முழுவதும் 40 கிளை நூலகங்கள் அமைந்துள்ளது என்றும், நூலகங்களில் இருக்கும் பல்லாயிரக்கணக்கான புத்தகங்களை நாள் ஒன்றுக்கு 17 ஆயிரம் வாசகர்கள் படித்து நமது மாவட்டத்தில் பயனடைகின்றனர் என்றும் கூறினார்.