நெல்லை மாநகராட்சி புதிய மேயராக 25 வது வார்டு மாமன்ற உறுப்பினர் கோ.ராமகிருஷ்ணன் தேர்வு
நெல்லை மாநகராட்சி புதிய மேயராக 25 வது வார்டு மாமன்ற உறுப்பினர் கோ.ராமகிருஷ்ணன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதற்கான அறிவிப்பை மாநகராட்சி ஆணையாளர் என்.ஓ.சுகபுத்ரா தெரிவித்து அதற்கான சான்றிதழையும் வழங்கினார்.
இந்தியாவின் நம்பர் ஒன் மாநகராட்சியாக நெல்லை மாநகராட்சியாக மாற்றுவேன் என மேயராக வெற்றிபெற்ற ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
நெல்லை மாநகராட்சி மேயர் பி.எம்.சரவணன் கடந்த 3 ஆம் தேதி தனது பதவியை சொந்தக்காரங்களுக்காக ராஜினாமா செய்தார்.அதனைத் தொடர்ந்து காலியாக உள்ள நெல்லை மாநகராட்சி மேயர் தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவுபித்தது.மேயர் வேட்பாளராக கோ.ராமகிருஷ்ணனை திமுக தலைமை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
அதன்படி நெல்லை மாநகராட்சி மைய மண்டபத்தில் இன்று 5 ஆம் தேதி காலை 10 -30 மணி அளவில் தேர்தலுக்கான வேட்பு மனு துவங்கப்பட்டது.
மேயர் வேட்பாளர் ராமகிருஷ்ணன் தனது வேட்புமனுவை மாநகராட்சி ஆணையாளர் சுகபுத்ராவிடம் தாக்கல் செய்தார்.அவரை எதிர்த்து 6 வது வார்டு மாமன்ற உறுப்பினர் பவுல்ராஜ் (கட்சியிலிருந்து தற்காலிகமாக சஸ்பெண்ட் செய்யப்பட்டவர்) வேட்பு மனு தாக்கல் செய்தார்.
காலை 11:30 மணிக்கு மேல் வாக்குப்பதிவு நடைபெற்றது.மொத்தம் உள்ள 55 மாமன்ற உறுப்பினர்களில் தி.மு.க கூட்டணிக்கு 51 உறுப்பினர்கள் உள்ளனர்.இதில் திமுக உறுப்பினர்களாக 41 பேர் உள்ளனர்.
இந்நிலையில் இன்று நடைபெற்ற மேயர் தேர்தலில் ஒரு மாமன்ற உறுப்பினர் தவிர 54 மாமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டு வாக்களித்தனர் இதில் இதில் திமுக வேட்பாளர் ராமகிருஷ்ணன் 30 வாக்குகளும், எதிர்த்து போட்டியிட்ட பவுல்ராஜ் 23 வாக்குகளும் பெற்றனர்,1 வாக்கு செல்லாதவை என்று அறிவிக்கப்பட்டது.
பின்னர் மாநகராட்சி ஆணையர் சுகபுத்ரா திமுக வேட்பாளர் கோ. ராமகிருஷ்ணன் வெற்றி பெற்றதாக அறிவித்தார்.அதனைத் தொடர்ந்து அதற்கான சான்று வழங்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து அவருக்கு கவுன்சிலர்கள் உள்ளிட்ட பலர் வாழ்த்து தெரிவித்தனர். இதனையடுத்து மேயராக வெற்றி பெற்ற ராமகிருஷ்ணன் மாநகராட்சி அருகில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
முன்னதாக ராமகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் என்னை மேயர் வேட்பாளராக அறிவித்து வெற்றிபெறச் செய்த முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதிஸ்டாலின் அமைச்சர்கள் தங்கம்தென்னரசு, நேரு மற்றும் திமுக நிர்வாகிகள் அனைவருக்கும், அனைத்து மாமன்ற உறுப்பினர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
உள்ளாட்சிதுறையில் அமைச்சராக இருந்த போது மேயராக இருந்த போது தலைவர் மு.க.ஸ்டாலின் எப்படி மக்கள் பணியாற்றினாரோ, சிங்கார சென்னையை உருவாக்கினாரோ அதுபோன்று சென்னைக்கு இணையாக நெல்லை மாநகராட்சியை முன்னேற்றுவேன், இந்தியாவிலேயே நம்பர் ஒன் மாநகராட்சியாக மாற்றுவேன் என தெரிவித்தார்.
இந்நிகழ்வில் பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் மு.அப்துல்வகாப், துணை மேயர் ராஜ்,முன்னாள் மேயர் சரவணன் உள்பட மாமன்ற உறுப்பினர்கள்,கழக நிர்வாகிகள்,மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.