பட்டாசு ஆலையில் திடீர் தீ விபத்து 3 பேர் படுகாயம்…
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அடுத்த கீழ்புத்துப்பட்டு கிராமத்தில் மஞ்சனிஸ்வரர் கோவில் அருகே ராஜேந்திரன் என்பவர் பட்டாசு ஆலை நடத்தி வருகிறார். இங்கு கீழ்புத்துப்பட்டு கழுவெரி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பெண்கள் வேலை செய்து வருகின்றனர். இன்று காலை வழக்கம் போல பெண்கள் வேலைக்கு வந்துள்ளனர். இதனையடுத்து கோவில் திருவிழாவிற்காக தயாரித்த பட்டாசுகளை அங்குள்ள காலிஇடத்தில் காய வைத்துள்ளனர்.
இந்நிலையில், திடிரென தீ விபத்து ஏற்பட்டது. பட்டாசுகள் தீபிடித்து எரிந்து வெடிக்க தொடங்கின. இதனை கண்ட அங்கிருந்த ஊழியர்கள் அலறி அடித்துக்கொண்டு ஓடினர். சத்தம் கேட்ட கிராமத்து மக்கள் இதுகுறித்து தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை போராடி அணைத்தனர். இதில் அப்பகுதியில் இருந்த 50 க்கும் மேற்பட்ட தென்னை மரங்கள், மாமரங்கள், தைல மரங்கள் எரிந்து நாசமாயின. பல ஆயிரம் மதிப்பிலான பட்டாசுகள் வெடித்தது.
இந்த விபத்தில் உரிமையாளர் ராஜேந்திரன், வேலைசெய்த ஊழியர்கள் கவுரி, ஆண்டாள் ஆகியோர் பலத்த காயமடைந்தனர். இதில் ராஜேந்திரன் ஜிப்மர் மருத்துவமனையிலும், மற்ற இரண்டு பேர் பிம்ஸ் மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.