கரூரில் ஐ டி அதிகாரிகளை தாக்கிய வழக்கில் 4 பேர் சரண்
கரூரில் ஐ.டி அதிகாரிகளை தாக்கிய வழக்கில் 4 பேர் சரண் – ஜாமீனில் வெளியில் இருந்தவர்களை உயர்நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவின் பேரில் சரணடைந்தனர்.
கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட ராமகிருஷ்ணபுரத்தில் முன்னாள் அமைச்சரும், தற்போதைய கரூர் எம்.எல்.ஏவுமான செந்தில் பாலாஜியின் சகோதரர் வீட்டிற்கு கடந்த 10 மாதங்களுக்கு முன்பு வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனைக்கு வந்தனர். அப்போது, திமுக தொண்டர்களுக்கும், அதிகாரிகளுக்கும் இடையே வாக்குவாதம், தள்ளு முள்ளு ஏற்பட்டது. அப்போது, வருமான வரித்துறை அதிகாரிகள் வந்த காரின் கண்ணாடியும் உடைக்கப்பட்டது.
இது தொடர்பாக வருமான வரித்துறை அதிகாரிகள் கொடுத்த புகாரின் அடிப்படையில் 19 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதில் 15 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
மீதமுள்ள 4 பேர் உடல்நிலை சரியில்லாததால், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், ஜாமீன் பெற்று காவல் நிலையத்தில் கையெழுத்திட்டு வந்தனர்.
இந்நிலையில் இவர்களின் ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தனர். அதனை விசாரித்த நீதிபதி ஜாமீனை ரத்து செய்ததுடன், அவர்களை சரணடையும்படி உத்தரவிட்டிருந்தார்.
அதனை தொடர்ந்து சசிகுமார், சரவணன், ராஜன், ரீகன் ஆகிய 4 பேரும் கரூர் நகர காவல் நிலையத்தில் சரணடைந்தனர். அவர்களை போலீசார் கரூர் விரைவு நீதிபதி நித்யா முன்பு ஆஜர்படுத்தி கரூர் கிளை சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் ஏற்கனவே சிறையில் இருந்த 15 பேரும் ஜாமீனில் உள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.