ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மினி பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 4 மாணவர்கள் உயிரிழப்பு
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மம்சாபுரத்தில் மினி பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் உட்பட 4 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர். காயமடைந்த இருவருக்கும் மேற்பட்டோர் ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மம்சாபுரத்தில் இருந்து காலை 8:20 மணி அளவில் 40 க்கும் மேற்பட்ட பயணிகளுடன் தனியார் மினிபஸ் ஸ்ரீவில்லிபுத்தூர் நோக்கி புறப்பட்டது. காலை நேரம் என்பதால் மினி பேருந்தில் பள்ளி கல்லூரி மாணவர்கள் அதிக அளவில் பயணித்தனர். ஸ்ரீவில்லிபுத்தூர் – மம்சாபுரம் சாலையில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகே வளைவில் திரும்பியபோது கட்டுப்பாட்டை இழந்த பேருந்து கவிழ்ந்து, சாலையை விட்டு பல அடி தூரம் இழுத்து செல்லப்பட்டது. தகவலறிந்து வந்த ஸ்ரீவில்லிபுத்தூர் தீயணைப்பு துறையினர் மற்றும் பொதுமக்கள் பேருந்து இடிபாடுகளில் சிக்கி இருந்தவர்களை மீட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்தில் 12ம் வகுப்பு மாணவரான மம்சாபுரம் காந்தி நகர் குருசாமி மகன் நிதிஷ் குமார்(17), ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு கலைக்கல்லூரியில் பி.ஏ தமிழ் 2ம் ஆண்டு படித்து மம்சாபுரம் மீனாட்சி தோட்ட தெரு கோவந்தராஜ் மகன் சதீஷ் குமார்(20), 10ம் வகுப்பு படித்து வந்த மம்சாபுரம் மேலூரை சேர்ந்த செல்வராஜ் மகன் வாசுராஜ்(15), தனியார் பல்கலை ஊழியரான குருசாமி மகன் மாடசாமி(28) ஆகிய 4 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர். மேலும் காயமடைந்த 20-க்கும் மேற்பட்டோர் ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும் இந்திரா நகர் பகுதி சேர்ந்த நிதிஷ் மினி பேருந்து ஓட்டுனர் கைது செய்யப்பட்டுள்ளார். குறுகலான சாலையில் வேகமாக சென்றதால் விபத்து நடந்ததா, அல்லது மினி பேருந்தில் அதிக பயணிகளை ஏற்றி சென்றது விபத்துக்கு காரணமா என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் உயிரிழந்த பள்ளி மாணவர்கள் பகுதியில் சாலைகளை சீரமைக்க வேண்டும் கூடுதலாக பேருந்துகள் இயக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பகுதி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.