வீட்டின் பூட்டை உடைக்காமல் 58 பவுன் நகைகள் கொள்ளை
வீட்டின் பூட்டை உடைக்காமல் 58 பவுன் நகைகள் கொள்ளை. 20 நாட்களாக கொள்ளை சம்பவம் தெரிய வருகிறதா என நகையுடன் கண்காணித்த நபர்.
தஞ்சாவூர் அருகே பள்ளிய அக்ரஹாரம் பகுதியை சேர்ந்தவர் வளர்மதி. இவர் அரசு பள்ளியில் உதவி தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவரது கணவர் பாலசுப்பிரமணியம் பெங்களூரில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர்களது மகன்களும் வெளியூரில் பணிபுரிந்து வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த 31ஆம் தேதி நிலத்தின் பத்திரப்பதிவுக்காக வீட்டில் உள்ள நகைகளை அடகு வைப்பதற்காக பீரோவை திறந்து நகையை எடுக்க முயன்றனர். அப்போது நகைப்பெட்டியில் நகைகள் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்த வளர்மதி இது குறித்து தனது கணவரிடம் தெரிவித்துள்ளார்.
மேலும் பூட்டு உடைக்காமல் – பீரோ கதவுகள் உடைக்காமல், துணிகள் எதுவும் கலையாமல் நகைகள் மட்டும் திருடு போயிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
மேலும் இது குறித்து தஞ்சை மேற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். மேலும் சிசிடிவி காட்சி அடிப்படையில் தஞ்சாவூர் மாவட்டம் திட்டை பகுதியை சேர்ந்த சுதாகர்(39) என்பவரை கைது செய்தனர்.
காவல்துறை நடத்திய விசாரணையில், சுதாகர் வளர்மதிக்கு உறவினர் ஆவார். மேலும் வளர்மதி மட்டும் வீட்டில் தனியாக இருப்பதும், பள்ளிக்கு செல்லும்போது வீட்டை பூட்டி சாவியை வீட்டின் வெளி பகுதியில் வைத்து செல்வதையும் அறிந்த சுதாகர், ஒரு வார காலமாக வீட்டை நோட்டமிட்டுள்ளார்.
இதனை அடுத்து மார்ச் 10ஆம் தேதி பகல் வேளையில், சாவியை எடுத்து வீட்டிலிருந்து நகைகளை மட்டும் எடுத்துக்கொண்டு மீண்டும் வீட்டை பூட்டி அதே இடத்தில் சாவியை வைத்து வந்ததும் தெரிய வந்தது.
மேலும் இந்த திருட்டு சம்பவம் குறித்து வளர்மதிக்கு தெரிகிறதா என கடந்த 20 நாட்களாக நகைகளை வீட்டில் வைத்து வளர்மதியை கண்காணித்து வந்துள்ளார் என்பது தெரிய வந்துள்ளது.
இதனைடுத்து சிசிடிவி காட்சியின் அடிப்படையில் சுதாகர் கைது செய்து அவர் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 58 பவுன் நகைகளை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.