இந்தியாவிலேயே அதிக அளவில் சாகித்யா அகடாமி விருதாளர்கள் பொருநை நதிக்கரையை சேர்ந்தவர்கள்
இந்தியாவிலேயே அதிக அளவில் சாகித்யா அகடாமி விருதாளர்கள் பொருநை நதிக்கரை பகுதியை சேர்ந்தவர்கள் என்றும் நம்மை சாதியால், மதத்தால் யாரும் பிரிக்க முடியாது தமிழர் என்ற ஒற்றை அடையாளத்தை முன்னிருத்தி முதல்வர் ஸ்டாலின் செயல்படுகிறார் என நெல்லையில் பொருநை இலக்கியத் திருவிழாவை தொடங்கி வைத்த தமிழக சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு கூறியுள்ளார்.
தமிழ்மொழியன் இலக்கிய மரபுகளை கொண்டாடும் வகையிலும் தமிழர் பண்பாடு நாகரிகத்தை இளைய தலைமுறையினர் அறிந்து கொள்ளும் வகையில் அரசு சார்பில் கடந்த ஆண்டு முதல் தமிழகத்தில் நெல்லை, கோவை, திருச்சி, மதுரை, சென்னை ஆகிய ஐந்து மண்டலங்களில் இலக்கியத் திருவிழா நடத்தப்பட்டு வருகிறது.
இதன் தொடர்ச்சியாக நெல்லையில் இரண்டு நாள் நடக்கும் 2- வது பொருநை இலக்கிய திருவிழா மற்றும் இளைஞர் இலக்கிய திருவிழா பாளையங்கோட்டை நேருஜி கலையரங்கத்தில் மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் தலைமையில் நடைபெற்றது.
இதில் தமிழக சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு மற்றும் சாகித்ய அகாடமி விருதாளர் பொன்னீலன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு இலக்கிய திருவிழாவை தொடங்கி வைத்தனர்.
இதனைத் தொடர்ந்து விழாவில் எழுத்தாளர் பொன்னீலன் பேசுகையில் தமிழகத்திற்கு பெருமையை தருவது இலக்கியம்தான், இந்த இலக்கியங்கள்தான் அனைவரையும் சிந்திக்க வைக்கிறது . பாரதி சுதந்திரத்திற்கு முன்பாகவே அனைவரையும் இலக்கியத்தால் சிந்திக்க வைத்தான், சிந்தனை பரந்து விரிய விரிய மனிதன் மானுடன் ஆகிறான், எழுத்து மனிதனை சிந்திக்க வைக்கிறது வளர்ச்சி அடையச் செய்கிறது என கூறினார்.
பின்னர் தமிழக சட்டப்பேரவை தலைவர் அப்பாவு பேசுகையில் இந்தியாவில் அதிக அளவு சாகித்ய அகாடமி விருது பெற்றவர்கள் உள்ள பகுதியாக பொருநை ஆற்றங்கரை பகுதி அமைந்துள்ளது.
தன்னை பற்றி நினைக்காமல் நாட்டைப் பற்றியும் சமூகத்தை பற்றியும் சிந்திப்பவர்கள் தான் படைப்பாளிகள். மறைந்த தலைவர் கலைஞர் தமிழ் இலக்கியம் மீது உள்ள பற்றின் காரணமாக அவர் எடுத்த முயற்சியால் தான் தமிழ் மொழி அழியாமல் இன்றளவும் வாழ்ந்து கொண்டிருக்கிறது.
உலகில் முதல் தோன்றிய மூன்று மொழிகளில் தமிழ் மொழி மட்டுமே அழியாமல் திகழ்ந்து வருகிறது.
இந்தியாவில் தோன்றிய மொழிகளில் வெளிநாடுகளில் ஆட்சி மொழியாக தமிழ் இருந்து வருகிறது. இந்தியாவை தாண்டி உலகின் ஏழு நாடுகளில் ஆட்சி மொழியாக இருக்கும் தமிழ் தமிழகத்தில் மட்டுமே ஆட்சி மொழியாக உள்ளது இந்தியாவில் இன்னும் தமிழ் ஆட்சி மொழியாக அங்கீகாரம் பெற முடியாத நிலையில் இருக்கிறது.
சாகித்ய அகாடமி விருது பெற்ற பலர் வறுமையில் இருந்ததை அறிந்து அவர்களை கௌரவம் செய்ததுடன் அவர்களுக்கு தேவையானவற்றை தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் செய்து வருகிறார் . தமிழ் இந்தியாவின் ஆட்சி மொழியாக வரவேண்டும் அதற்கான பல முயற்சிகள் எடுக்கப்பட்டாலும் ஆட்சி மொழி அந்தஸ்து கிடைப்பது மிக கடினமாக உள்ளது.
சிந்துசமவெளி நாகரீகத்திற்கு முந்தைய நாகரீகமாக கருதப்படும்தமிழகத்தில் கீழடி ஆதிச்சநல்லூர் உள்ளிட்ட பல இடங்களில் நடத்திய ஆய்வில் அறிவியல் ரீதியாக கண்டறியப்பட்டுள்ளது.
சிந்து சமவெளி நாகரிகத்தில் கண்டெடுக்கப்பட்ட பொருட்களிலும் கீழடி உள்ளிட்ட தமிழகத்தில் நடத்தப்பட்ட அகழ்வாய்வில் கண்டெடுக்கப்பட்ட பொருட்களிலும் ஒற்றுமை அதிக உள்ளது.
சிந்து சமவெளி பகுதிகளில் கண்டெடுக்கப்பட்டுள்ள பொருட்களை பார்த்தால் தமிழர்கள் பயன்படுத்திய பொருட்களைப் போல தான் அதிகம் தெரிகிறது.
தமிழர்கள் சிந்து நதிக்கரையிலும் வாழ்ந்தார்கள் என்பதற்கு மிகப்பெரிய சான்றாக அந்த ஆய்வு தகவல்கள் உள்ளன. ஆனால் அதனை மத்திய அரசு வெளியிடாமல் மறைத்து வருகிறது.
இந்தியாவின் வரலாறு சிந்துச் சமவெளியில் இருந்து தொடங்கினாலும் பொருநை நதி கரையில் தொடங்கினாலும் தமிழர்களின் நாகரீகமாகத்தான் வெளி வருகிறது தமிழ் நாகரீகம் என்பது சாதாரணமானதல்ல உலகின் தலைசிறந்த இலக்கியங்களை உள்ளடக்கியது.
மனிதன் வாழ்வை எப்படி வாழ வேண்டும் என்பதை திருக்குறள் இரண்டு அடியில் காட்டுகிறது. தமிழகத்தில் ஜாதி மதத்தால் யாரையும் பிரிக்க முடியாது திட்டமிட்டு சிலர் நம்மை பிரிக்க நினைக்கிறார்கள் அதனை யாரும் ஏற்க கூடாது எனவேதான் சமூக நீதி, தமிழர் என்ற அடையாளத்துடன் முதல்வர் செயல்படுகிறார் என தெரிவித்தார்.
இதனைத்தொடர்ந்து கவிஞர் ஆண்டாள் பிரியதர்ஷினி தலைமையில் கருத்தரங்கம் நடைபெற்றது. முன்னதாக விழாவில் அனைவரும் தீண்டாமை எதிர்ப்பு உறுதி மொழி எடுத்துக்கொண்டனர். தொடர்ந்து கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றது .
இந்த இலக்கிய திருவிழா தொடக்க விழாவில் பொதுநூலகத்துறை இயக்குனர் இளம்பகவத், மாநகர காவல்துறை ஆணையர் மூர்த்தி மேயர் சரவணன் மற்றும் இலக்கிய வாதிகள், எழுத்தாளர்கள் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.