நாம் தமிழர் கட்சியினர் வீட்டில் சோதனை
தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் வீடுகளில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி, கோவை, சென்னை, திருச்சி, சிவகங்கை மற்றும் தென்காசி உள்ளிட்ட இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
இதில், திருச்சி சண்முகா நகரில் உள்ள நாதக நிர்வாகி சாட்டை துரைமுருகன், வகங்கையில் தென்னகம் என்ற யூடியூப் சேனலை நடத்தி வரும் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த விஷ்ணு பிரதாப், தென்காசியில் நாம் தமிழர் கட்சியின் மாநில கொள்கை பரப்பு செயலாளர் இசை மதிவாணன், கோவையில் நிர்வாகி ரஞ்சித்குமார் மற்றும் முருகன் உள்ளிட்டோர்கள் வீடுகளில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்துவதாக கூறப்பட்டது.
வெளிநாட்டில் இருந்து நிதி பெறுவது தொடர்பாக எழுந்த புகாரின் அடிப்படையில் சோதனை நடைபெறுவதாக கூறப்படுகிறது. இந்த சூழல், நாம் தமிழர் கட்சி நிர்வாகி சாட்டை துரைமுருகன் வீட்டில் நடைபெற்ற என்ஐஏ சோதனை நிறைவு பெற்றது. சாட்டை துரைமுருகனின் திருச்சி இல்லத்தில் நடைபெற்ற சோதனையின் போது முக்கிய ஆவணங்களை என்ஐஏ அதிகாரிகள் கைப்பற்றியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
அதுமட்டுமில்லாமல், வரும் 7ஆம் தேதி சாட்டை துரைமுருகன் விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என என்.ஐ.ஏ அதிகாரிகள் சம்மன் அனுப்பியுள்ளனர். இதைபோல, நாம் தமிழர் கட்சியை சேர்ந்த இடும்பவனம் கார்த்தி என்பவருக்கு இன்று காலை சென்னையில் உள்ள என்ஐஏ அலுவலகத்தில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால், இடும்பவனம் கார்த்தி வெளியூரில் இருப்பதால் 5ம் தேதி ஆஜராவதாக பதில் கூறியுள்ளார்.
இந்த நிலையில், நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் வீடுகளில் என்ஐஏ சோதனை நடத்துவதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. என்.ஐ.ஏ சோதனை சட்டவிதி மீறல் என்றும் சம்மனுக்கு ஆஜராகி விளக்கம் அளிக்க அவகாசம் வழங்காமல் சோதனை நடத்தியதாகவும் குற்றம்சாட்டி நாம் தமிழர் கட்சி வழக்கறிஞர்கள் சங்கர், சேவியர் பெலிக்ஸ் ஆகியோர் நீதிபதி எம்எஸ் ரமேஷ் முன்பு முறையிட்டனர். இந்த வழக்கை பிற்பகலில் விசாரணை செய்வதாக நீதிபதி எம்.எஸ் ரமேஷ் அறிவித்துள்ளார்.