இஸ்லாமியர்களை குறிவைக்கும் பொது சிவில் சட்டம்
கடந்த 2022ஆம் ஆண்டு, ஜூன் மாதம், பொது சிவில் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான வழிகளை ஆய்வு செய்ய உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ரஞ்சனா பிரகாஷ் தேசாய் தலைமையில் ஒரு நிபுணர் குழுவை அமைத்தது உத்தரகாண்ட் பாஜக அரசு.
மீண்டும் ஆட்சிக்கு வந்தால் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவோம் என வாக்குறுதி அளித்தது. பொதுத்தேர்தலை முன்னிட்டு மக்களை பிளவுப்படுத்த முயற்சிப்பதாக காங்கிரஸ் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இஸ்லாமியர்களை தவிர்த்து, பழங்குடி மக்களும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
உத்தரகாண்ட் தேர்தலில் வெற்றிப்பெற்றதை தொடர்ந்து, வாக்குறுதியாக அளிக்கப்பட்ட பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த மாநில பாஜக அரசு முனைப்பு காட்டி வந்தது. இந்த நிலையில், உத்தரகாண்ட் சட்டப்பேரவையில் பொது சிவில் சட்ட மசோதாவை அம்மாநில முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி இன்று அறிமுகம் செய்தார்.
அதில், பல சட்டப்பிரிவுகள் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. குறிப்பாக, இஸ்லாமியர்களை குறிவைக்கும் விதமாகவும் நவீன சமூகத்திற்கு பொருந்தாத வகையிலும் சட்டம் இருப்பதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்துள்ளன.
சட்டப்பிரிவு 4இன் கீழ், திருமணம் செய்து கொள்ள மசோதாவில் 5 நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி, வாழ்க்கைத்துணை உயிரோடு இருந்தால் திருமணம் செய்து கொள்ள முடியாது. எனவே, பொது சிவில் சட்டத்தின்படி இரண்டாம் திருமணத்திற்கும் பலதார திருமணத்திற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
லிவ்-இன் உறவை பொறுத்தவரையில் கடுமையான சட்ட விதிகள் கொண்டு வரப்பட்டுள்ளது. லிவ்-இன் ரிலேஷன்ஷிப்பில் இருப்பவர்கள் கட்டாயம் 21 வயதுக்கு மேற்பட்டவர்களாக இருக்க வேண்டும். லிவ் இன் உறவில் இருப்பவர்கள் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும். உத்தரகாண்ட் மாநிலத்தில் வசிப்பவர்களா? இல்லையா? என்பது குறித்த அறிக்கையை பதிவாளரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.
லிவ்-இன் உறவில் இருப்பவர்களுக்கு பெற்றோரிடம் ஒப்புதல் பெற வேண்டியது கட்டாயம். லிவ்-இன் உறவுக்கு வந்து ஒரு மாதத்திற்குள் பதிவு செய்ய வேண்டும். இல்லையென்றால், மூன்று மாதங்கள் சிறை தண்டனையோடு, ரூ.10,000 அபராதம் விதிக்கப்படலாம்.
லிவ்-இன் ரிலேஷன்ஷிப்பில் இருப்பவர்கள் பதிவு செய்யும்போது தவறான தகவல்களை வழங்கினால் மூன்று மாதங்கள் சிறை தண்டனை மற்றும் ரூ. 25 ஆயிரம் அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும். லிவ்-இன் ரிலேஷன்ஷிப்பில் இருப்பவர்களின் அறிக்கைகள் உள்ளூர் காவல்நிலைய அதிகாரிக்கு அனுப்பப்பட்டு சரிபார்க்கப்படும்.
அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விவரங்கள் தவறாக இருந்தால், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று உத்தரகண்ட் பொது சிவில் சட்ட மசோதாவில் கூறப்பட்டுள்ளது. சொத்துரிமையை பொறுத்தவரையில், ஆண்களுக்கும் பெண்களுக்கும் சம உரிமைகள் வழங்கப்பட்டுள்ளது. பொது சிவில் சட்டத்தில் இருந்து பழங்குடி மக்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.