மின்வாரியத்தில் தற்காலிமாக பணியாளர் கண்மாய் நீரில் மூழ்கி பலி
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி கிழக்குத்தெரு பகுதியை சேர்ந்தவர் சந்திரன் மகன் ராஜாக்கனி (27). இவருக்கு திருமணம் ஆகவில்லை. இவரது தந்தையான சந்திரன் தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற நிலையில் சந்திரனின் மகனான ராஜாக்கனி மின்வாரியத்தில் தற்காலிமாக பணிபுரிந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் திருச்சுழி – அருப்புக்கோட்டை சாலையிலுள்ள திருச்சுழி பெரிய கண்மாயில் நேற்று மாலை தனது நண்பர்கள் சிலருடன் ராஜாக்கனி குளிக்க சென்றதாக கூறப்படுகிறது.
அப்போது கண்மாயில் குளித்து கொண்டிருந்த ராஜாக்கனி திடீரென கண்மாய் நீரில் மூழ்கியதாக தெரிய வருகிறது. இந்த நிலையில் கண்மாயில் மூழ்கியவரை தேடிய நிலையில் சிறிது நேரத்தில் மயக்க நிலையில் மீட்ட ராஜாக்கனியை அவரது நண்பர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் அவரை திருச்சுழி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.
ஆனால் அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் நீரில் மூழ்கிய ராஜாக்கனி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த நிலையில் தகவலறிந்து மருத்துவமனை விரைந்து சென்ற திருச்சுழி போலீசார் ராஜாக்கனியின் உடலை பிரேத பரிசோதனைக்காக பரிந்துரை செய்த நிலையில் இதற்கு ராஜாக்கனியின் உறவினர்கள் உடன்படாததால் திருச்சுழி மருத்துவமனை வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதனையடுத்து திருச்சுழி போலீசார் கண்மாய் நீரில் மூழ்கி இறந்து போன ராஜாக்கனியின் உறவினர்களுடன் ஏற்பட்ட பேச்சு வார்த்தைக்கு பின்னர் ராஜாக்கனியின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த நிலையில் இந்த சம்பவம் குறித்து திருச்சுழி போலீசார் இறப்புக்கான காரணம் குறித்து மேலும் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் கண்மாயில் குளிக்க சென்ற வாலிபர் கண்மாய் நீரில் மூழ்கி இறந்த சம்பவம் திருச்சுழி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.