டாக்டர்கள் ஈகோவை கைவிடவேண்டும்
டாக்டர்கள் ஈகோவை கைவிட்டு அந்தந்த பகுதிகளில் வீடுகளுக்கு சென்று உடல்நலம் குறித்து விசாரிக்க வேண்டும். அப்படி செய்தால்தான் வீடுதேடி மருத்துவம் என்ற நிலை ஏற்படும் என முதலமைச்சர் ரங்கசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
புதுச்சேரி அரசின் சுகாதாரத்துறை சார்பில் மணவெளி தொகுதியில் வாண்டையார்பாளையத்தில் 45 லட்ச ரூபாய் செலவில் தாய் சேய் நல இல்லம் கட்டப்பட்டுள்ளது. தேங்காய்திட்டில் ரூ.50 லட்சம் செலவில் துணை சுகாதார மையம் அமைக்கப்பட்டுள்ளது.
இதனை முதலமைச்சர் ரங்கசாமி திறந்து வைத்தார் அப்போது பேசிய அவர்,மத்திய அரசு மருத்துவமனைகள் அமைக்க ஒரு விகிதாச்சாரத்தை வைத்துள்ளது. அந்த விகிதாச்சாரத்தை விட அதிகமாக மருத்துவமனைகளை அமைத்துள்ளோம். புதுச்சேரியில் கல்விக்கும், சுகாதாரத்துக்கும் அதிகளவில் நிதி ஒதுக்குகிறோம். அனைத்து பரிசோதனைகளும் மருத்துவமனைகளில் கிடைக்க வேண்டும்.
டாக்டர்கள் எப்போதும் இருக்க வேண்டும் என்பதற்காக சுகாதார இயக்கம் மூலம் கூடுதலாக டாக்டர்களை நியமித்துள்ளோம். டாக்டர்கள் ஈகோவை கைவிட்டு அந்தந்த பகுதிகளில் வீடுகளுக்கு சென்று உடல்நலம் குறித்து விசாரிக்க வேண்டும். அப்படி செய்தால்தான் வீடுதேடி மருத்துவம் என்ற நிலை ஏற்படும். நான் டாக்டர், போகமாட்டேன் என கூறக்கூடாது என அறிவுறுத்தினார்.
டாக்டர்களுக்கு சம்பளமும் உயர்த்தி வழங்கியுள்ளோம். சுகாதாரத்துக்காக சென்னை சென்றால் அதிக பணம் செலவாகும். அதை தவிர்க்கும் வகையில் புதுச்சேரியிலேயே மருத்துவம் முழுமையாக கிடைக்க வேண்டும்.
நகர பகுதியில் ஒரு அரசு மருத்துவமனை, கதிர்காமத்தில் ஒரு மருத்துவமனை இயங்குகிறது. கிராமப்புற மக்களுக்கும் அனைத்து வசதிகளுடன் மருத்துவம் கிடைக்கும் வகையில் கரிக்கலாம்பாக்கத்தில் அரசு மருத்துவமனை அமைக்க உள்ளோம் என முதல்வர் தெரிவித்தார்.
கடந்த ஆண்டு பிளஸ்2 படித்து முடித்து, கல்லூரிகளில் படிக்கும் அரசு பள்ளி மாணவர்களுக்கும் இலவச லேப்டாப் நிச்சயமாக வழங்கப்படும். நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றுவதில் அரசுக்கு எந்த தயக்கமும் கிடையாது.
எனவே போரட்டங்கள் தேவையில்லை. கோப்பை மாற்றியமைக்க கொஞ்சம் காலதாமதம் ஆகும். ஆனாலும் நிச்சயமாக பிளஸ்2 முடித்த மாணவர்களுக்கும் லேப்டாப் வழங்கப்படும் என முதல்வர் கூறினார்.
விழாவில் சபாநாயகர் செல்வம், அமைச்சர் லட்சுமிநாராயணன், சுகாதாரத்துறை இயக்குனர் ஸ்ரீராமுலு, துணை இயக்குனர்கள் முரளி, ரகுநாதன் உட்பட பலர் பங்கேற்றனர்.