திடீரென மன்மோகன் சிங்கை புகழ்ந்த மோடி
இந்த ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட் கடந்த பிப்ரவரி 1ஆம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதற்காக கடந்த ஜனவரி மாதம் 31ஆம் தேதி நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்கியது.
இந்த கூட்டத்தொடரானது நாளை வரையில் நடைபெற உள்ளது. நேற்று 7வது நாளாக மக்களவை, மாநிலங்களவை என இரு அவைகளிலும் வழக்கமான விவாத நிகழ்வுகளுக்கு கூட்டத்தொடர் காலை 11 மணியளவில் தொடங்கியது.
கூட்டத்தொடரில், பதவி காலம் நிறைவடையும் மாநிலங்களவை உறுப்பினர்களுக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தை மாநிலங்களவை தலைவர் ஜெகதீப் தன்கர் தாக்கல் செய்தார். மாநிலங்களவை உறுப்பினர்களுக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது பிரதமர் மோடி உரையாற்றினார்.
அப்போது அவர் பேசுகையில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் பிரதமரும், மாநிலங்களவை உறுப்பினருமான மன்மோகன் சிங் பற்றி பேசினார்.
அவர் கூறுகையில், மன்மோகன் சிங் அனைவருக்கும் வழிகாட்டியாகவும், உத்வேகம் அளிக்க கூடியராகவும் இருந்துள்ளார். நமது நாட்டின் ஜனநாயகம் பற்றி பேசும் போதெல்லாம், மன்மோகன் சிங்கின் பங்களிப்பு எப்போதும் நினைவில் கொள்ளப்படும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.