காவலர்களுக்கு தலைக் கவசம் அணிவித்து சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியை துவக்கி வைத்த மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
ஜனவரி 15 முதல் பிப்ரவரி 14 வரை தேசிய சாலை பாதுகாப்பு மாதமாக அனுசரிக்கப்படுகிறது.அந்த வகையில் தமிழகம் முழுவதும் போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு ஆணையரகம் சார்பில் மாதம் முழுவதும் சாலை பாதுகாப்பு குறித்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.அதன் அடிப்படையில் தமிழகம் முழுவதும் அந்தந்த மாவட்ட ங்களில் மாவட்ட நிர்வாகம் சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.
அதன் அடிப்படையில் திருவாரூர் வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் திருவாரூர் பழைய பேருந்து நிலையத்திலிருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை காவலர்கள் மற்றும் தன்னார்வ அமைப்புகள் பங்கு பெற்ற சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு வாகன பேரணி நடைபெற்றது.இந்த பேரணியை திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர்.
முன்னதாக சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியில் பங்கு பெற்ற காவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் தலைக்கவசம் அணிவித்த பின்பு வாகன பேரணியை துவக்கி வைத்தனர். மேலும் ஒட்டுநர்கள் மற்றும் பொதுமக்களுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்த புத்தகத்தையும் அவர்கள் வழங்கினர். இந்த நிகழ்ச்சியில் திருவாரூர் வட்டார போக்குவரத்து அலுவலர் பழனிச்சாமி உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.