மத்திய அரசை கண்டித்து விருதுநகர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உள்ளிட்ட1000க்கும் மேற்பட்டோரை காவல் துறையினர் கைது செய்தனர்.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ராஜபாளையம், சிவகாசி, விருதுநகர், அருப்புக்கோட்டை சிஐடியு, ஏஐடியுசி, ஐஎன்டியுசி, ஹெச் எம் எஸ் உள்ளிட்ட அனைத்து தொழிற்சங்கத்தினர் மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள், போக்குவரத்து பணியாளர்கள் சம்மேளனம் சார்பில் மத்திய அரசை கண்டித்து போராட்டம் நடைபெற்றது.
ராஜபாளையம் பகுதியில் காந்தி சிலை அருகே ஒன்று திரண்ட 400க்கும் மேற்பட்ட அனைத்து தொழிற்சங்கத்தினர் அங்கிருந்து தென்காசி சாலையில் ஊர்வலமாக வந்தனர். பஞ்சு மார்க்கெட் முதல் சொக்கர் கோயில் வரை சேதமடைந்த சாலைகளை புதுப்பிக்க வேண்டும், இஎஸ்ஐ மருத்துவமனையை தரம் உயர்த்த வேண்டும்,
திருத்தப்பட்ட தொழிலாளர் சட்டங்களை திரும்ப பெற வேண்டும், தொழிற்சங்கங்களை முடக்கக் கூடாது, விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், உணவு, மருந்துகள், இயந்திரங்கள், விவசாய இடுபொருட்கள் மீதான ஜிஎஸ்டியை நீக்க வேண்டும்,
பெட்ரோலிய பொருட்கள், சமையல் எரிவாயு மீதான கலால் வரியை குறைக்க வேண்டும், தேசிய குறைந்தபட்ச ஊதியத்தை மாதம் ரூ. 26 ஆயிரமாக நிர்ணயம் செய்ய வேண்டும், பழையை ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், ஒப்பந்த பணியாளர்களை நிரந்தரம் செய்ய வேண்டும்,
அரசு துறையில் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட 25 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஸ்டேட் வங்கி எதிரே போராட்டக் காரர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் மதுரை – தென்காசி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதனை அடுத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த நூற்றுக்கும் மேற்பட்ட காவல் துறையினர் மற்றும் ஊர் காவல் படையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்து தனியார் திருமண மண்டபத்திற்கு அழைத்து சென்றனர்.
இதே போல ஸ்ரீவில்லிபுத்தூர் அருப்புக்கோட்டை சிவகாசி சாத்தூர் உள்ளிட்ட பகுதிகள் என மாவட்டம் முழுவதும் நடைபெற்ற மறியல் போராட்டத்தில் சுமார் 1000 மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு தனியார் மண்டபத்தில் அடைக்கப்பட்டனர்.