விளவங்கோடு தொகுதி காலி என அறிவிப்பு
காங்கிரஸ் கட்சி சார்பில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள விளவங்கோடு சட்டமன்ற தொகுதியில் மூன்று முறை விஜயதரணி சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இவர் கடந்த சனிக்கிழமை காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார். இதற்கிடையில் தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் செல்வப்பெருந்தகை விஜயதரணி மீது கட்சி தாவல் தடை சட்டத்தின்படி நடவடிக்கை எடுத்து பதவி நீக்கம்செய்ய வேண்டும் என சபாநாயகருக்கு, சட்டப்பேரவை செயலாளருக்கும் கடிதம் அனுப்பினார்.
சட்டமன்ற உறுப்பினர் பதவி விலகல் கடிதத்தை சட்டப்பேரவை தலைவருக்கும், சட்டப்பேரவை முதன்மை செயலாளருக்கும் விஜயதாரணி அனுப்பி இருந்தார். நேற்று நெல்லையில் பேட்டி அளித்த சபாநாயகர் அப்பாவு விஜயதரணியின் ராஜினாமா கடிதம் ஏற்றுக் கொள்ளப்பட்டது என தெரிவித்தார்.
பொதுவாக ஒரு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டால் அந்த தொகுதிக்கு அடுத்த 6 மாதத்துக்குள் இடைத்தேர்தல் நடத்த வேண்டும் என்ற விதி உள்ளது. இதனால் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலுடன் விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தலையும் நடத்தி முடிக்க தேர்தல் ஆணையம் திட்டமிடும் என்றே தெரிகிறது.