விண்ணுக்கு செல்லும் இந்தியர்கள் மோடி அறிவிப்பு
இன்று காலை கேரளா பயணம் மேற்கொண்ட பிரதமர் திருவனந்தபுரத்தில் உள்ள விக்ரம் சாராபாய் விண்வெளி ஆய்வு நிலையத்தை பார்வையிட்டார். அப்போது விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தில் ரூ.1,800 கோடி மதிப்பிலான 3 முக்கிய விண்வெளி திட்டங்களைத் தொடங்கி வைத்தார்.
அப்போது அடுத்த ஆண்டு ககன்யான் திட்டத்தின் கீழ் விண்வெளிக்கு செல்ல உள்ள நான்கு வீரர்களை பிரதமர் மோடி அறிமுகம் செய்து வைத்தார். அதன்படி குரூப் கேப்டன் பிரசாந்த் பாலகிருஷ்ணன் நாயர், குரூப் கேப்டன் அஜித் கிருஷ்ணன், குரூப் கேப்டன் அங்கத் பிரதாப், விங் கமாண்டர் சுபான்ஷு சுக்லா ஆகிய 4 பேர் விண்வெளி செல்லவுள்ளனர்.
மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் இந்தியாவின் கனவு திட்டமான ககன்யான் திட்டத்தை கடந்த 2018-ஆம் ஆண்டு பிரதமர் மோடி அறிவித்தார். இத்திட்டத்தின் கீழ் விண்வெளிக்குச் செல்லும் வீரர்களின் பெயர்கள் யார் என தெரியாமல் இருந்த நிலையில் தற்போது அவர்கள் யார் என தெரியவந்துள்ளது.
முதல் முறை மனிதர்களை அனுப்பும் விண்வெளிப் பயணம் என்பதால் இஸ்ரோ பல ஆய்வுகளைச் செய்து வருகிறது. இஸ்ரோ நான்கு பேரையும் பயிற்சிக்காக ரஷ்யாவிற்கு அனுப்பியது, விண்வெளிக்கு செல்லும் 4 வீரர்களும் தீவிர உடற்பயிற்சிகளை மேற்கொண்டு தயாராக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.