நீல் வாக்னர் ஓய்வு
நியூஸிலாந்து அணியின் டெஸ்ட் போட்டிகளில் சிறந்து விளங்கிய நீல் வாக்னர் தற்போது சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்துள்ளார். நியூஸிலாந்து அணிக்காக இவர் 12 வருட காலமாக டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறார்.
மொத்தம் 64 டெஸ்ட் போட்டிகளில் நியூஸிலாந்து அணிக்காக விளையாடி, 260 விக்கெட்டுகள் எடுத்துள்ளார். இவர் தற்போது, தனது 37-வது வயதில் ஓய்வை அறிவித்துள்ளார்.கடந்த 2021 ஜூன் மாதம் நடைபெற்ற டெஸ்ட் உலகக்கோப்பையின் இறுதி ஆட்டத்தில் இந்திய அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி நியூஸிலாந்து அணி அபார வெற்றியை பெற்று முதல் டெஸ்ட் கிரிக்கெட் உலகக்கோப்பையை வென்றது. மேலும் அந்த இறுதி போட்டியில் வெற்றி பெற்றதுக்கு நீல் வாக்னர் பெரும் பங்காற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது, அவர் தனது ஓய்வை அறிவிக்கும் போது, ” நீங்கள் கொடுத்த அன்பிலிருந்தும், ஆதரவிலிருந்தும் விலகி இந்த முடிவு எடுத்தது அவ்வளவு எளிதானது அல்ல இருந்தும் இளைய தலைமுறையினர் இந்த நியூஸிலாந்து அணியை முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டிய நேரம் இது. அதனால் தற்போது நான் விடைபெறுவது சரியாக இருக்கும். நியூஸிலாந்திற்காக டெஸ்ட் கிரிக்கெட் விளையாடும் ஒவ்வொரு தருணத்தையும் நான் ரசித்துள்ளேன்.
மேலும், ஒரு அணியாக நாங்கள் சாதித்ததை நினைத்தும் பெருமைப்படுகிறேன். எனது வாழ்க்கையில் கிடைத்த நண்பர்களை நான் மிகவும் மதிக்கிறேன். இன்று இந்த இடத்திற்கு வர உதவிய அனைவருக்கும் நன்றி சொல்ல விரும்புகிறேன். நான் இன்று மனிதனாக மாற உதவியதற்கும், என்னுடைய மூன்று குழந்தைகளை இந்த உலகிற்கு கொண்டு வருவதற்கு உதவியதற்கும் எனது மனைவி லானாவுக்கும் நான் இந்த இடத்தில் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்.” என்று நியூஸிலாந்தின் ஒரு ஊடுகம் ஒன்றில் அவர் கண்கலங்கி தனது ஓய்வை அறிவித்து இவ்வாறு கூறியுள்ளார்.