பாலராமரை தரிசிக்க 300 பேர் பாஜக சார்பில் அயோத்திக்கு அழைத்து செல்லப்பட்டனர்
பழனியில் இருந்து அயோத்தி பாலராமரை தரிசிக்க 300 பேர் பாஜக சார்பில் அயோத்திக்கு அழைத்து செல்லப்பட்டனர்.
இந்தியாவே எதிர்பார்த்திருந்த அயோத்தி ஶ்ரீராமர் ஆலயம் கடந்த மாதம் 22 ம் தேதி பிராண பிரதிஷ்டை செய்யப்பட்டு பக்தர்களுக்காக திறக்கப்பட்டது.
ஆலயம் திறக்கப்பட்டது முதல் இந்தியா முழுவதும் இருந்து இலட்சக்கணக்கான ராமபக்தர்கள் கோயிலில் உள்ள பாலராமரை தரிசனம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் பாரதீய ஜனதா கட்சியின் ஆலயம் மற்றும் ஆலயங்கள் ஆன்மீக மேம்பாட்டு பிரிவு சார்பில் இந்தியா முழுவதும் உள்ள ராமபக்தர்கள் அயோத்திக்கு அழைத்து செல்லப்பட்டு அவர்களை தரிசனம் செய்ய வைத்து அவரவர் ஊர்களுக்கு அனுப்பி வருகின்றனர்.
தமிழகத்தில் திண்டுக்கல் மேற்கு மாவட்டம் சார்பில் 900 பக்தர்கள் தேர்வு செய்யப்பட்டு அயோத்திக்கு அனுப்பப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் பழனி தனியார் மண்டபத்தில் இன்று பாஜக சார்பில் ராமபக்தர்கள் அயோத்திக்கு அழைத்து செல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு ஆலயங்கள் மற்றும் ஆன்மீக மேம்பாட்டு பிரிவு ரவி வரவேற்புரை வழங்கினார். பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் திருமலைசாமி, பாஜக மேற்கு மாவட்ட தலைவர் கனகராஜ் உள்ளிட்டோர் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தனர். விஹெச்பி., செந்தில்குமார் சிறப்புரை நிகழ்த்தினார்.
இந்நிகழ்ச்சியில் பழனியை அடுத்த ஆயக்குடி, திருநகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 300 பேர் தேர்வு செய்யப்பட்டு பேருந்துகள் மூலம் திருப்பூர் அழைத்து செல்லப்பட்டு அங்கிருந்து ரயில் மூலமாக அயோத்திக்கு அழைத்து செல்லப்படுகிறார்கள்.
அங்கு அவர்களுக்கு தங்குமிடம், உணவு, தரிசன ஏற்பாடு, திரும்ப ஊருக்கு வர வாகன ஏற்பாடுகள் அனைத்துமே பாஜக சார்பில் செய்யப்பட்டுள்ளது. இவர்களுக்கு வேண்டிய வசதிகளை செய்து தர குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளது.
இதே போல அயோத்தி செல்ல விரும்புவோர் பாஜக நிர்வாகிகளை அணுகலாம் என்றும், மாதம்தோறும் இனி ராமபக்தர்கள் அயோத்திக்கு அழைத்து செல்லப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.