விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் எழுந்தருளி அருள் பாலித்து வரும் ஸ்ரீ மரகதாம்பிகை உடனுறை ஸ்ரீ திந்திரிணீஸ்வரர் கோவிலில் பாலாலய பூஜை நடைபெற்றது.
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் ஸ்ரீ மரகதாம்பிகை உடனுறை ஸ்ரீ திந்திரிணீஸ்வரர் கோவிலில் நடந்த பாலாலய விழாவில் கோவில் வளாகத்தில் உள்ள தட்சிணாமூர்த்தி, நாக தேவதை, சிவன், நவ கிரகங்கள், நந்தி பகவான், ராஜகோபுரம், கொடிமரம் ஆகியவற்றின் முன்பு தனித்தனியாக கலசங்கள் வைத்து பூஜைகள் செய்யப்பட்டது.
பூஜை செய்யப்பட்ட கலசங்கள் அனைத்தும் கோவில் வளாகத்தில் அமைக்கப்பட்ட யாகசாலைக்கு கொண்டுவரப்பட்டது. பின்னர் யாக சாலை முன்பு வைக்கப்பட்டிருந்த கலசங்களுக்கு பூஜைகள் செய்யப்பட்டு மகாதீப ஆராதனை காண்பிக்கப்பட்டது. அதனை அடுத்து யாகசாலை வேள்வி தொடங்கியது. யாகசாலை குண்டத்தில் நவதானியங்கள், மூலிகை பொருட்கள், நெய் உள்ளிட்டவை செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து பூர்ணாஹூதி செலுத்தப்பட்டது.
யாக சாலையில் வைக்கப்பட்டு பூஜிக்கப்பட்ட கலசங்கள் கோவில் உட்பிரகாரம் வலம் வந்து மூலவர்கள் ஸ்ரீ மரகதாம்பிகை மற்றும் ஸ்ரீ திந்திரிணீஸ்வரர் மேலும் தெய்வங்கள் உருவங்கள் பொறித்த அத்திப் பலகைக்கு கலச நீரால் அபிஷேகம் செய்யப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.