தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர் சேர்க்கை செயலியில் தன்னை இணைத்துக்கொண்ட நடிகர் விஜய்
15 மணி நேரத்தில் 20 லட்சம் உறுப்பினர்கள் கலக்கும் விஜய்
தமிழக வெற்றிக் கழகத்தில் 5 மணி நேரத்தில் 20 லட்சம் பேர் அக்கட்சியில் உறுப்பினர்களாக இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாட்டில் 2026 சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் விதமாக நடிகர் விஜய், தமிழக வெற்றிக் கழகம் என்ற புதிய அரசியல் கட்சியை தொடங்கி இருக்கும் நிலையில், மாநில வாரியாக நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டனர். இதன்பின், தமிழகம் முழுவதும் 2 கோடி பேரை கட்சியின் உறுப்பினராக சேர்க்க வேண்டும் என்ற இலக்கு நிர்ணயம் செய்து, உறுப்பினர் சேர்க்கைக்கான செயலி விரைவில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டது.
அந்தவகையில், உலக மகளிர் தினமான நேற்று மாலை 5 மணியளவில் தமிழக வெற்றிக்கழகத்தில் உறுப்பினர் சேர்க்கையை அக்கட்சி தலைவர் விஜய் தொடங்கி வைத்தார். அதில், முதல் உறுப்பினராக அவரும் இணைந்தார். அதுமட்டுமில்லாமல், அரசியல் கட்சியை தொடங்கியபின் முதல் முறையாக வீடியோ வெளியிட விஜய், உங்களுக்கு விருப்பம் இருந்தால் இணையுங்கள் என்று பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார்.
அதன்படி, உறுப்பினர் சேர்க்கைக்காக வாட்ஸ்அப், டெலிகிராம், “க்யூஆர்” குறியீடு உள்ளிட்டவை அறிமுகம் செய்து, அதன்மூலம் செயலியைப் பயன்படுத்தி உறுப்பினர் சேர்க்கை பணி நேற்று தொடங்கியது. உறுப்பினர் அட்டையை பெறுவதற்காக, ஒரேநேரத்தில் ரசிகர்கள், தொண்டர்கள், பொதுமக்கள் என பலரும் செயலியை பயன்படுத்தியதால் அறிமுகம் செய்யப்பட்ட ஒருசில நிமிடங்களிலேயே தொழில்நுட்பக் கோளாறு முடங்கிவிட்டது.
வாட்ஸ்அப், டெலிகிராம் செயலி என அனைத்து தளங்களுமே முடங்கியது. பிறகு, சில மணிநேரத்தில் அனைத்து தளங்களும் பயன்பாட்டுக்கு வந்ததாக கூறப்பட்டாலும், இன்று 2வது நாளாக முடங்கியே இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. லட்சக்கணக்கான பேர் உறுப்பினர்களாக சேர request கொடுத்து உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர் சேர்க்கை தொடங்கிய 15 மணிநேரத்தில் 20 லட்சத்துக்கும் அதிகமானோர் இணைந்துள்ளதாக அக்கட்சி நிர்வாகிகள் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இன்னும் பலர் உறுப்பினர் அட்டை பெறுவதற்கு request கொடுத்து OTP வராமல் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
எனவே, உறுப்பினர் சேர்க்கை தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், ஏற்கனவே இருப்பவர்கள் தவிர, புதிய உறுப்பினர்கள் சேர்க்க வேண்டும் என்று கூறியுள்ளதாகவும், புதிய உறுப்பினர் சேர்க்கைக்கு பிறகு அடுத்தகட்ட அரசியல் நகர்வு குறித்து தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய் அறிவிப்பார் என புஸ்ஸி ஆனந்த் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.