பாலியல் வழக்கில் ‘ஸ்குவிட் கேம்’ நடிகர் ஓ இயாங் சூ-விற்கு 8 மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் கடந்த 2021-ம் ஆண்டு வெளியான தென்கொரிய தொடர் ‘ஸ்குவிட் கேம்’. இதன் முதல் சீசன் உலகம் பெரும் முழுவதும் வரவேற்பை பெற்றது. இந்தத் தொடரில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்தவர் தென் கொரியாவைச் சேர்ந்த 78 வயது நடிகர் ஓ இயாங் சூ. இத்தொடருக்காக தென் கொரிய நடிகர்களில் முதல் முதலாக சிறந்த துணை நடிகருக்கான கோல்டன் குளோப் விருது இவருக்கு வழங்கப்பட்டது.
இந்நிலையில், கடந்த 2017-ம் ஆண்டு இளம்பெண் ஒருவரிடம் தகாத முறையில் நடந்ததாக ஓ இயாங் சூ மீது புகார் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அதில் ஓ இயாங் சூ மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு தவறு என்று விடுவிக்கப்பட்டார். அத்துடன் விசாரணையும் முடித்து வைக்கப்பட்டது.
ஆனால், சம்பந்தப்பட்ட பெண் மீண்டும் 2021-ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஓ இயாங் சூ மீது பாலியல் புகார் அளித்தார். இந்த புகாரும் கடந்த 2022 ஏப்ரல் மாதம் முடித்து வைக்கப்பட்டது. ஆனால், மீண்டும் அந்த இளம்பெண் புகார் அளித்ததால் ஓ இயாங் சூ மீதான வழக்கு 2022 முதல் நடந்து வந்தது. இந்நிலையில், அவர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்ட நிலையில், ஓ இயாங் சூ-வுக்கு 8 மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.