அம்பானி மகன் திருமண நிகழ்ச்சியில் திருட்டு திருச்சியை சேர்ந்த 5 பேர் கைது
இம்மாதம் 2ம் தேதி ராஜ்கோட்டில், மெர்சிடிஸ் கார் ஒன்றின் கண்ணாடியை உடைத்து ரூ.10 லட்சம் ரூபாய் மற்றும் லேப்டாப் ஒன்று திருடப்பட்டதாக புகார் தெரிவிக்கப்பட்டது.
இந்த புகார் தொடர்பாக, விசாரணை நடத்திய போலீசார் , சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில், குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டு, மேற்கொண்டு விசாரணை நடத்தி வந்தனர்.
சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் இந்த திருட்டு தொடர்பாக டெல்லியில் ஒருவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்தப்பட்ட தொடர் விசாரணையில் டெல்லியில் ஜெகன், தீபக், குணசேகர், முரளி, ஏகாம்பரம் ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் 5 பேரும் திருச்சி ராம்ஜிநகரைச் சேர்ந்தவர்கள் என்பதும், அம்பானி மகனின் திருமண நிகழ்ச்சியில் திருடலாம் என்ற எண்ணத்தில், திருடுவதற்காகவே திருச்சியில் இருந்து டெல்லி புறப்பட்டு வந்துள்ளதும் தெரிய வந்தது. திருடுவதற்காக ஜாம்நகர் சென்று பார்த்த போது அங்கு பாதுகாப்பு கெடுபிடிகள் அதிகளவில் இருந்ததால், அங்கு திருடாமல் ஜாம்நகர் பேருந்து நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த கார் கண்ணாடியை உடைத்து உள்ளே இருந்த லேப்டாப்பை திருடியதும் தெரிய வந்தது.
அதன் பின்னர் அங்கிருந்து மீண்டும் ராஜ்கோட் சென்று, அங்கு நிறுத்தப்பட்டிருந்த மெர்சிடிஸ் கார் கண்ணாடியை உடைத்து, காருக்குள் இருந்த ரூ.10 லட்சம் பணத்தையும், லேப்டாப்பையும் திருடியுள்ளது விசாரணையில் தெரிய வந்தது.
இவற்றைத் திருடி விட்டு அனைவரும் மீண்டும் டெல்லி புறப்பட்டு சென்றுள்ளனர். இந்த திருட்டுக் கூட்டத்திற்கு தலைவனாக விளங்கிய மதுசூதன் தற்போது தலைமறைவாக இருக்கிறான்.
அவன் தான் எங்கு திருடவேண்டும் என்பதை முடிவு செய்வான். தொடர் விசாரணையில், இந்த கும்பல் முக்கிய நகரங்களுக்கு ரயிலில் சென்று கூட்டம் அதிகமிருக்கும் பகுதியில் நிறுத்தப்பட்டிருக்கும் கார் கண்ணாடியை உடைத்து திருடுவதை வழக்கமாக கொண்டிருந்திருக்கிறார்கள்.
கடந்த 4 மாதங்களில் ராஜ்கோட், ஜாம்நகர், அகமதாபாத் மற்றும் டெல்லி என 11 இடங்களில் கார் கண்ணாடியை உடைத்து திருடியதை ஒப்புக்கொண்டுள்ளனர். ஆந்திரா, மகாராஷ்டிரா மற்றும் கேரளத்திலும் இவர்கள் தொடர்ந்து திருட்டில் ஈடுபட்டிருந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது.