முதியவர்களுக்கு வீட்டிலேயே இருந்து வாக்களிக்கும் வகையிலான விருப்ப மனு விநியோகம்
85 வயதை கடந்த முதியவர்களுக்கு வீட்டிலேயே இருந்து வாக்களிக்கும் வகையிலான விருப்ப மனு விநியோகம் தொடங்கியது. வாக்குச் சாவடி அலுவலர்கள் வீடு வீடாகச் சென்று வழங்கி வருகின்றனர்.
திருநெல்வேலி பாராளுமன்ற தொகுதியில் 16 லட்சத்து ,50 ஆயிரத்து 532 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 85 வயதை கடந்தவர்களாக 23 ஆயிரத்து 895 பேர் உள்ளனர். 85 வயது முதல் 99 வயது வரையிலான முதியவர்கள் 23 ஆயிரத்து 100 பேரும் 100 வயதை கடந்தவர்கள் 795 பேரும் திருநெல்வேலி பாராளுமன்ற தொகுதியில் உள்ளனர்
85 வயது கடந்த முதியவர்கள் தங்கள் வீட்டிலேயே இருந்து வாக்களிக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்படும் என தேர்தல் ஆணையம் ஏற்கனவே அறிவித்திருந்தது அதன் அடிப்படையில் திருநெல்வேலி பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் வசிக்கும் முதியவர்கள் வீடுகளிலேயே இருந்தவாறு வாக்களிக்கும் வகையிலான 12 D விண்ணப்பம் வாக்குச்சாவடி அலுவலர்களால் முதியவர்கள் வீடுகளுக்கே சென்று வழங்கப்பட்டு வருகிறது.
கிராம நிர்வாக அலுவலர்கள் மேற்பார்வையில் இந்த பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது அந்தந்த கிராமங்களில் இருக்கக்கூடிய முதியவர்களின் எண்ணிக்கை கணக்கெடுத்து நேரடியாக அவர்களிடம் சென்று அவர்களுடைய விருப்பத்தை பொறுத்து வீட்டிலேயே இருந்து வாக்களிக்கும் வகையிலான விண்ணப்பத்தில் கையெழுத்து பெற்று வருகின்றனர்.
அடுத்து ஒரு வாரத்தில் இந்த பணிகள் முழுமையாக முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது வேட்பு மனு தாக்கல் முடிவடைந்து வேட்பாளர் பட்டியல் வெளியான பின்பு வாக்குச்சீட்டு தயார் செய்யப்பட்டு வாக்கு பெட்டியுடன் தேர்தல் அலுவலர்கள் முதியவர்கள் வீட்டிற்கு தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன்பு சென்று அவர்களின் வாக்குகளை பெறுவார்கள் தற்போது திருநெல்வேலி தொகுதி முழுவதும் முதியவர்களிடம் வீடுகளிலேயே இருந்து வாக்களிக்கும் சீட்டைப் பெற்று அவர்களின் அனுமதியை பெறும் நடவடிக்கைகள் நடைபெற்று வருகிறது.