மக்களை ஏமாற்றும் அரசியல்வாதிகளுக்கு வாக்களிப்பு மூலம் தண்டனை கொடுங்கள்
புதுச்சேரி வில்லியனூர் சட்டமன்ற தொகுதி ஒரு ஆன்மீக பூமியாகும். இந்த ஆன்மீக பூமியில் பல்வேறு அரசியல் வாதிகள் சந்தர்ப்பவாத அரசியல் செய்து வருகின்றனர்.
பாஜக வேட்பாளராக போட்டியிடும் நமச்சிவாயம் அவர்கள் இந்த சட்டமன்ற தொகுதியில் பலமுறை வெற்றி பெற்றவர்.
தற்போதைய இந்தியா கூட்டணியில் உள்ள திமுக சட்டமன்ற உறுப்பினர் சிவா உருளையன்பேட்டை தொகுதியில் 4 முறை வெற்றி பெற்றவர். ஆனால் அவர் அந்த மக்களை அனாதையாக விட்டுவிட்டு இந்த முறை இங்குள்ள சிறுபான்மை மக்களை ஏமாற்றி போட்டியிட்டு வெற்றிபெற்றார்.
கடந்த சட்டமன்ற தேர்தலின் போதே திமுகவும், பாஜகவும் கள்ள உறவு வைத்துக்கொண்டு இருவரும் தொகுதிகளை மாற்றிக்கொண்டு நின்றார்கள். பாஜகவுக்கு ஆதரவாக நம்முடைய முதலமைச்சர் வாக்கு சேகரிக்கிறார்.
இந்த தேர்தல் முடிந்தவுடன் ஒரே மாதத்தில் முதலமைச்சர் அவர்கள் மாற்றம் செய்யப்பட்டு பாஜக ஆட்சி இங்கு அமைக்கப்படும். இதை என்.ஆர்.காங்கிரசில் உள்ள உண்மை தொண்டர்கள் உணர வேண்டும்.
கடந்த ஆண்டு போலீ மதுபானம் அருந்தி தமிழகத்தை சேர்ந்த இருபதுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். போலீ மதுபானம் வைத்திருந்தவர் திமுகவை சேர்ந்தவர் என்பதை நாம் மறந்துவிட கூடாது. புதுச்சேரி மாநிலத்தின் கஞ்சா உள்ளிட்ட போதை பொருள் விற்பனையின் தலைநகரமாக இந்த தொகுதி மாற்றப்பட்டுள்ளது. ஒரு காலத்தில் நகர பகுதியில் இருந்த உருளையன்பேட்டை தொகுதி குற்றப்பின்னணியில் உள்ளவர்களின் தொகுதியாக இருந்தது. அந்த தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் இந்த தொகுதியில் வெற்றி பெற்ற உடன் அனைத்து தீய பழக்க வழக்கங்களும் இந்த தொகுதிக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
வில்லியனூர் தொகுதியை சுற்றிலும் விவசாய விளைநிலங்கள் நிறைந்த பகுதியாகும். பாஜகவின் வேட்பாளரே இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட லே-அவுட்டுகளை போட்டுள்ளார். எந்த லே-அவுட்டுக்கும் பிபிஏ அப்ரூவல் கிடையாது. ஒரு லே-அவுட்டுக்கும் இன்னொரு லே-அவுட்டுக்கும் இணைப்பு சாலைகள் இல்லை. விவசாய விளைநிலங்கள் ஆட்சி அதிகாரத்தை பயன்படுத்தி சட்ட விரோதமாக விற்பனை செய்யப்படுகிறது. அதை தடுக்க அரசு அதிகாரிகள் இதுவரை எந்த நடவடிக்கையம் எடுக்கவில்லை.
இந்த தொகுதியில் முஸ்லீம் உள்ளிட்ட சிறுபான்மையினர் அதிகம் வாழும் தொகுதியாகும். சிறுபான்மை மக்கள் இந்த ஆட்சியில் மூன்றாம் தர மக்களாக நடத்தப்படுகின்றனர். அவர்களுடைய உரிமைகள் ஒவ்வொன்றாக பறிக்கப்பட்டு வருகிறது. பாஜக ஆட்சியில் வக்பு போர்டு கூட அமைக்கப்படவில்லை. அந்த மக்களின் நல்வாழ்வுக்காக வழங்கப்படும் சிறு கடன் வழங்கும் திட்டம் முழுமையாக தடுத்து நிறுத்தப்பட்டுவிட்டது. சிறுபான்மை மக்களுக்காக பட்ஜெட்டில் போதிய நிதி ஒதுக்கப்படவில்லை. இன்னமும் வக்பு போர்டு இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது நியாயமான செயலா? எனவே இவை எதையும் தட்டிக்கேட்காத காங்கிரஸ் வேட்பாளரையும், பாஜக வேட்பாளரையும் இந்த தேர்தலில் மக்கள் புறக்கணிக்க வேண்டும் என பிரச்சாரத்தை மேற்கொண்டார்….