இண்டியா கூட்டணிக்கு அளிக்கும் ஒவ்வொரு ஓட்டும் செல்லாத ஓட்டு – முதல் அமைச்சர் பேச்சு
ஆட்சிக்கே வர முடியாத கூட்டணிக்கு வாக்களித்து என்ன பிரயோஜனம்..இண்டியா கூட்டணிக்கு அளிக்கும் அனைத்து செல்லாத ஓட்டு தான் என முதல்வர் ரங்கசாமி கூறியுள்ளார்.
புதுச்சேரி பாகூர் தொகுதியில் பாஜக வேட்பாளர் நமச்சிவாயத்தை ஆதரித்து புதுச்சேரி-கடலூர் சாலை காட்டுக்குப்பம் சந்திப்பில் முதல்வர் ரங்கசாமி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது பேசிய அவர்,மத்திய அரசு போதிய நிதியை தருவதன் காரணமாக பல திட்டங்கள் செயல்படுத்த முடிகிறது. கடந்த இரண்டரை ஆண்டு ஆட்சியில் மக்களுக்கு எந்த ஒரு வரியும் விதிக்கப்படவில்லை. இதற்கு முக்கிய காரணம் மத்திய அரசு தான். மத்திய அரசு தரும் நிதியின் காரணமாகவே திட்டங்களை செயல்படுத்த முடிகிறது.ஆனால் கடந்த ஆட்சியில் எந்த திட்டமும் செயல்படுத்தவில்லை.
நமது ஆட்சி அமைந்த பிறகு தான் அனைத்து திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.முதியோருக்கு பென்ஷன் உயர்வு, வயது மாணவர்களுக்கு கல்வி உதவி, லேப்டாப் போன்றவை செயல்படுத்தப்படுகிறது.ஆனால் கடந்த காங்கிரஸ் ஆட்சியில் ஒன்றுமே செய்யவில்லை என கூறினார்.
ஆட்சிக்கே வர முடியாத ஒரு கட்சிக்கு வாக்களித்து என்ன பிரயோசனம்..? அவர்களுக்கு அளிக்கும் அனைத்து செல்லாத ஓட்டு தான் என கூறிய முதல் அமைச்சர்,400 இடங்களுக்கு மேல் தேசிய ஜனநாயக கூட்டணி தான் வெற்றி பெறும்.நாம் ஏமாற கூடாது.கடந்த முறை ஏமார்ந்து அவதிப்பட்டு விட்டோம்.இந்த முறை ஏமாறாமல் நமச்சிவாயத்தை வெற்றி பெற செய்து மத்திய அமைச்சராக்க வேண்டும்..இந்த ஆட்சி மக்களுக்கு தொடர்ந்து வளர்ச்சிகளை கொடுக்க வேண்டும்.இதற்கு நமச்சிவாயம் வெற்றி பெற வேண்டும் என முதல் அமைச்சர் ரங்கசாமி தெரிவித்தார்.