வெயிலிலிருந்து விடிவு காலம் எப்போது?
மே 2ம் தேதி வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது.
தமிழகத்தில் மே மாதம் வருவதற்கு முன், கோடை வெயில் கொளுத்தி எடுத்து வருகிறது. தமிழக்தில் பல இடங்களில் 100 டிகிரிக்கும் அதிகமான வெப்பநிலை பதிவாகி வருகிறது. இந்நிலையில், எப்போடா மழை வரும் என காத்திருந்த நிலையில், மழைக்கான வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் கூறியுள்ளது.
குமரிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, மே 2ம் தேதி முதல் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
மேலும், ஏனைய தமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். அதுபோல், மே 3ம் தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், இன்று முதல் மே 1ம் தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். இதர தமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது ஓரிரு இடங்களில் அசௌகரியம் ஏற்படலாம்.