இந்தியாவில் 1% பணக்காரர்களிடம் 40% சொத்து!
இந்தியாவின் பெரும் பணக்காரர்களாக இருக்கும் 1 சதவீதம் பேரிடம் நாட்டின் மொத்த சொத்து மதிப்பில் 40 சதவீதம் குவிந்திருப்பதாகவும். அடித்தட்டில் உள்ள பாதிக்கும் மேற்பட்ட மக்கள்தொகை வெறும் 3 சதவீதம் சொத்துகளை பகிர்ந்து கொண்டுளதாகவும் ஆக்ஸ்பேம் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஆக்ஸ்ஃபேம் இன்டர்நேஷனல் என்ற பொருளாதார உரிமைகள் குழு டேவோஸ் நகரில் நடைபெற்று வரும் சர்வதேச பொருளாதார கூட்டத்தின் முதல் நாளில் இந்த அறிக்கையை தாக்கல் செய்துள்ளது. பொருளாதாரத்தில் இந்தியாவின் சமத்துவமின்மை பற்றி இந்த அறிக்கையில் தகவல்கள் இடம்பெற்றுள்ளன.
அந்த அறிக்கையின் தகவலின்படி இந்தியாவின் டாப் 10 பணக்காரர்களுக்கு ஒருமுறை 5% வரி விதித்தால் அதைக் கொண்டு நாட்டின் ஒட்டுமொத்த குழந்தைகளுக்கும் பள்ளிக் கல்வி வழங்கிவிடலாம் என்று தெரிகிறது. 2017 முதல் 2021 வரை கவுதம் அதானிக்கு மட்டும் இதுபோன்ற ஒருமுறை பிரத்யேக வரி விதித்திருந்தால் அதன் மூலம் 1.79 லட்சம் கோடி ரூபாய் கிடைத்திருக்கும். அதைக் கொண்டு இந்தியாவில் உள்ள 50 லட்சம் ஆரம்பப் பள்ளிகளுக்கு ஓராண்டுக்கு ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்கி நியமித்திருக்கலாம்.
இந்த அறிக்கைக்கு ‘Survival of the Richest’ என்று தலைப்பிடப்பட்டுள்ளது. இந்திய பில்லினர்களுக்கு குறைந்தது 2 சதவீதம் வரி விதித்தால் கூட அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு நாட்டில் உள்ள ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளுக்கு தேவையான உணவை, மருத்துவ சேவையை வழங்க தேவையான ரூ.40,423 கோடி பணத்தை பெறலாம் என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்திய பில்லினர்களுக்கு ஒரே ஒருமுறை 5 சதவீதம் வரி விதித்தால் ரூ.1.37 லட்சம் கோடி வருவாய் கிட்டும். இது மத்திய சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சகம், ஆயுஷ் அமைச்சகத்தின் ஓராண்டு பட்ஜெட்டான முறையே ரூ.86,200 கோடி மற்றும் ரூ.3,050 கோடியை பகிர்ந்தளிக்க பயன்படும்.
பாலின சமத்துவத்தைப் பொறுத்தவரை இந்தியாவில் பெண் பணியாளர்கள் 63 பைசா சம்பாதித்தால் ஆண் பணியாளர் ரூ.1 சம்பாதிக்கும் சமத்துவின்மையே நிலவுகிறது. இந்தியாவின் 100 பெரும் பணக்காரர்களுக்கு ஒரே முறை 2.5% சொத்து வரி விதித்தால் நாட்டின் ஒட்டுமொத்த குழந்தைகளுக்கும் பள்ளிக் கல்வி வழங்கலாம். கரோனா பெருந்தொற்று தொடங்கி 2022 வரையிலான காலகட்டத்தில் இந்திய பெரும் பணக்காரர்களின் சொத்து 121 சதவீதம் அல்லது ரூ.3,608 கோடியாக அதிகரித்துள்ளது.
2020ல் இந்தியாவில் பில்லினர்களின் எண்ணிக்கை 102 ஆக இருந்த நிலையில் 2022 ஆம் ஆண்டில் இது 166 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவின் டாப் 100 பணக்காரர்களின் மொத்த சொத்து மதிப்பு ரூ.54.12 லட்சம் கோடியாக உள்ளது. இது இந்திய பொது பட்ஜெட் மதிப்பீட்டில் உள்ள செலவுத் தொகையை 18 மாதங்களுக்கு சமாளிக்கக் கூடியது.
ஆக்ஸ்ஃபேம் இந்தியாவின் சிஇஓ அமிதாப் பெஹார் கூறுகையில், தலித்துகள், ஆதிவாசிகள், முஸ்லிம்கள், பெண்கள், முறைசாரா துறை சார்ந்தோர் பொருளாதார ரீதியாக மேலும் ஒடுக்கப்படுகின்றனர் அது பணக்காரர்கள் மேலும் பணக்காரர்களாக பிழைத்திருக்க உதவுகிறது என்று தெரிவித்துள்ளது.